அருள்பணித்துவம் சமூகத்துடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது!

அருள்பணித்துவ ஊழியம் என்பது வெறும் ஒரு பங்களிப்பு மட்டுமல்ல, தொடர்ச்சியான மனமாற்றம் மற்றும் அர்ப்பணிப்புக்கான பயணமாக இருப்பதால், அருள்பணியாளர்கள் அனைவரும் அருள்பணித்துவ வாழ்வில் நம்பகத்தன்மை உள்ளவர்களாக இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி மற்றும் வாழ்க்கை மற்றும் பணி குறித்த ஆணைகளின் (Decrees) அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, டிசம்பர் 22, திங்கள்கிழமையன்று, எழுதியுள்ள திருமடல் (Apostolic Letter) ஒன்றில் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை.

01. அருள்பணித்துவ வாழ்வில் நம்பகத்தன்மை

திருஅவையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நம்பகத்தன்மைக்கு அருள்பணியாளர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்றும், இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் இந்த இரண்டு ஆணைகளின் 60-வது ஆண்டு நிறைவு, அருள்பணித்துவ வாழ்வையும், அதன் புதுப்பித்தலையும் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ள திருத்தந்தை, இது தொடர்ச்சியான உருவாக்கப் பயிற்சி மற்றும் மற்றவர்களுக்கு பணியாற்றுவதற்கான அவசியத்தை வலியுறுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

02. திருச்சங்கத்தின் ஆணைகள் பற்றிய வெளிப்பாடு

அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி (Optatam Totius) மற்றும் அருள்பணித்துவத்தின் தன்மை (Presbyterorum Ordinis) பற்றிய ஆணைகள் இன்றும் முக்கியமானவை என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, அவை கிறிஸ்துவில் ஆழமாக வேரூன்றி, நிலையான புதுப்பித்தலால் வடிவமைக்கப்பட்ட ஓர் அருள்பணித்துவத்திற்கு அழைக்கின்றன என்றும், இந்த ஆணைகள் உண்மையுள்ள மற்றும் மறைபரப்புப் பணியை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன என்றும் மொழிந்துள்ளார்.

03. அருள்பணியாளரின் இறையழைத்தல்

ஒவ்வொரு இறையழைத்தலும் கடவுளிடமிருந்து வரும் இலவச கொடை என்றும், அருள்பணியாளர்கள் இறைவேண்டல், பணி மற்றும் தொடர் உருவாக்கப் பயிற்சி மூலம் தங்கள் உறுதிப்பாட்டை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, சரியான நம்பகத்தன்மை என்பது மனமாற்றத்தின் அன்றாடப்  பயணமாகும் என்றும், இது தொடர் ஆன்மிக மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சியால் அடையாளப்படுத்தப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

04. உருவாக்கப் பயிற்சி மற்றும் நம்பகத்தன்மை

அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி என்பது அருள்பணியாளர் பயிற்சியகத்துடன் (seminary) முடிவடைவதில்லை; அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அருள்பணியாளர்கள் தங்கள் இறையழைத்தலை மகிழ்ச்சியுடனும் நம்பகத்தன்மையுடனும் வாழ்வதன் தொடர்ச்சியான சவாலை ஏற்றுக்கொண்டு, தங்கள் பணியில் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறார்கள் என்றும் விவரித்துள்ளார்.

05. அருள்பணியாளர்களுக்கு இடையே உடன்பிறந்த உறவு

அருள்பணித்துவம் என்பது சமூகத்துடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்றும், அருள்பணியாளர்கள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படவில்லை, ஆனால் ஒருவருக்கொருவர் உடன்பிறந்த  உறவுடன் வாழ அழைக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, இந்த ஒன்றிப்பு அவர்களின் பணியை வலுப்படுத்துகிறது மற்றும் திருஅவையின் உயரிய நன்மைக்காக அவர்கள் ஒன்றாகப் பணியாற்றுவதை உறுதி செய்கிறது என்றும் விளக்கியுள்ளார்.

06. ஒன்றிணைந்த பயணம் மற்றும் அருள்பணித்துவம்

திருஅவை என்பது ஒரு ஐக்கியம், மேலும் ஒன்றிணைந்த பயணம் (synodality) அருள்பணித்துவத்தின் பணியை வரையறுக்க வேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, உலகத்திற்கான மறைபரப்புப் பணியிலும் சேவையிலும் பங்குகொண்டு, இறைமக்கள் அனைவருடனும் ஒத்துழைப்புடன் வாழ்வதற்கு அருள்பணியாளர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

07. அருள்பணித்துவத்தின் பணி

தனிப்பட்ட சிந்தனைக்கு அப்பால் சென்று தன்னலமின்றி மற்றவர்களுக்கு பணியாற்ற அருள்பணியாளர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, அருள்பணித்துவத்திற்கான இறையழைத்தல் என்பது வெறும் தனிப்பட்ட பயணம் மட்டுமல்ல, உண்மையான உறவுகள் மற்றும் மனத்தாழ்மையுடன் கூடிய பணிகள் வழியாக மற்றவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் ஒரு கொடை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

08. அருள்பணித்துவத்தின் எதிர்காலம்

இந்த ஆணைகளின் 60-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில், திருஅவையின் எதிர்காலம் என்பது, இறையழைத்தல்களைப் பேணி வளர்ப்பதிலும், உண்மையுள்ள, மகிழ்ச்சியான பணியை உறுதி செய்வதிலும் அடங்கியுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்வோம் என்று மொழிந்துள்ள திருத்தந்தை, இறைவேண்டல் மற்றும் பணிக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு திருஅவையின் மறைபரப்புப் பணியை வலுப்படுத்தும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

Comments are closed.