மார்ச் 23 : திங்கட்கிழமை. நற்செய்தி வாசகம்

நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 43-54
அக்காலத்தில்
இயேசு சமாரியாவிலிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.
கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கேதான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்” என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார். இயேசு அவரிடம், “நீர் புறப் பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.
அவர் போய்க்கொண்டிருக்கும்போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்குக் காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். ‘உம் மகன் பிழைத்துக்கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச்சிந்தனை.
“காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்”
ஒரு நகரின் முக்கியமான பகுதியில் நற்செய்திக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. நற்செய்திக் கூட்டத்தில் ஏராளமான பேர் கலந்து கொண்டிருந்தார்கள். கூட்டத்தை வழிநடத்திய போதகர் ஆர்வமாய்ப் பேசிக்கொண்டிருக்கும்போது, தற்செயலாக அந்த வழியாக வந்த நாத்திகர் ஒருவர், வேகமாக மேடை ஏறி, ஒலிபெருக்கியைப் பிடித்து, “நீங்கள் பேசிக்கொண்டிருக்கின்ற விண்ணகம், பாதாளம், கடவுள்… ஆகியவற்றின்மீது எனக்கு நம்பிக்கையே கிடையாது. கண்ணால் காணமுடியாத இவற்றையெல்லாம் பற்றி நீங்கள் பேசிக்கொண்டிருப்பது சுத்த பைத்தியக்காரத்தனம்” என்று சொல்லிவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கினார்.
இப்படியொரு செயலைச் சிறிதும் எதிர்பார்த்திராத போதகரும் சரி, மக்களும் சரி ஒருவினாடி அதிர்ந்துபோய் நின்றார்கள். அப்பொழுது அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு பார்வையற்றவர் மெதுவாக மேடையில் ஏறி, ஒலிபெருக்கியின் முன்பாக நின்றுகொண்டு பேசத் தொடங்கினார்: “இப்பொழுது பேசிவிட்டுப் போன சகோதரருக்கு ஒருசில வார்த்தைகளைச் சொல்லிக்கொள்ள விழைகிறேன். என்னுடைய நண்பர்கள், பக்கத்தில் ஓர் ஆறு ஓடுவதாகச் சொல்கிறார்கள்… இதுவரைக்கும் நாம் அதைப் பார்த்ததில்லை. அதேபோன்று இங்கிருக்கின்ற கோயில் மிகவும் அருமையாக இருக்கின்றது என்று சொல்கின்றார்கள். இதையும் நான் பார்த்ததில்லை. காரணம் எனக்குப் பார்வை கிடையாது.
நான் பக்கத்தில் ஓடக்கூடிய ஆற்றினைப் பார்க்கவில்லை என்பதற்காகவோ அல்லது இங்கிருக்கின்ற கோயிலைப் பார்வையில்லை என்பதற்காகவோ அவையெல்லாம் இல்லை என்றாகிவிடாது. எனக்குப் பார்வையில்லை. அதுதான் பிரச்சனை. அதுபோன்றுதான் விண்ணகத்தையோ, பாதாளத்தையோ, கடவுளையோ பார்க்க முடியவில்லை என்பதற்காக அவையெல்லாம் இல்லை என்று சொல்லமுடியுமா…? அல்லது அவற்றின்மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லமுடியுமா…? மனித வாழ்க்கைக்கு நம்பிக்கை மிக முக்கியம். அது இல்லையென்றால், வாழ்க்கையே அர்த்தமில்லாமல் போய்விடும்.”
ஆம், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் குறிப்பிடுவது போல, ‘கண்ணுக்குப் புலப்படாதவதை பற்றி ஐயமற்ற நிலையே நம்பிக்கை’ (எபி 11: 1). அத்தகைய நம்பிக்கையை நாம் கடவுளிடத்தில், இயேசுவிடத்தில் கொண்டிருந்தால் நம்முடைய வாழ்வு சிறக்கும் என்பது உறுதி. நற்செய்தி வாசகம் நம்பிக்கையின் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அருமடையாளங்களைக் கண்டபின்பு இயேசுவை நம்புதல்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அரச அலுவலரின் மகனை நலப்படுத்துக்கின்ற நிகழ்வைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு கானாவுக்கு வந்திருந்த செய்தியைக் கேள்விப் பட்ட அரச அலுவலர், அவரிடம் வந்து நோயுற்றிருக்கும் தன்னுடைய மகனை நலப்படுத்துமாறு கேட்கின்றார். அப்பொழுது இயேசு அவரிடம் ‘அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டதாலன்றி நீங்கள் நம்பவே மாட்டர்கள்” என்கிறார். இவ்வார்த்தைகள் நம்முடைய ஆழமான சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன.
யோவான் நற்செய்தியில் வருகின்ற அரச அலுவலரும், மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியில் வருகின்ற நூற்றுவத் தலைவரும் ஒன்றுதான் (மத் 8: 5-13; லூக் 7: 2-10) என்பதுபோலத் தோன்றினாலும், இருவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வித்தியாசங்களை அவர்கள் பேசக்கூடிய வார்த்தைகளைக் கொண்டே உணர்ந்துகொள்ளலாம். இப்பொழுது இயேசு தன்னிடம் வந்த அரச அலுவலரிடம் ஏன் மேற்சொன்ன வார்த்தைகளைச் சொல்லவேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்கு முக்கியமான காரணம், சமாரியர்களிடத்தில் இயேசு எந்த அருமடையாளங்களையும் செய்யவில்லை; ஆனாலும் அவர்கள் இயேசுவை நம்பினார்கள் (யோவா 4: 1-42). கலிலேயாவில் இருந்தவர்களோ இயேசு அருமடையாளங்களைச் செய்ததைப் பார்த்துவிட்டு, அதன்பிறகுதான் அவர்மீது நம்பிக்கை கொண்டார்கள். அதனால்தான் இயேசு அப்படிச் சொல்கின்றார்.
காணாமல் நம்பவேண்டும்
மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியில் வரும் நூற்றுவத் தலைவருக்கும் யோவான் நற்செய்தியில் வருகின்ற அரசு அலுவலருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்று மேலே பார்த்தோம். அப்படிப்பட்ட வித்தியாசங்களுள் ஒன்று, நூற்றுவத் தலைவர் இயேசுவிடம், நீர் என் வீட்டிற்குள் வர நான் தகுதியவற்றவன் என்று சொல்வதும், அரச அலுவலர், என் மகன் இறக்குமுன் வாரும் என்று சொல்வது ஆகும். அரச அலுவலர் தன்னிடம் இப்படிச் சொன்னதும், இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக்கொள்வான்” என்கின்றார். இயேசு சொன்ன வார்த்தைகளை நம்பி, அரச அலுவலர் வீட்டிற்குச் செல்கின்றார். அவர் நம்பியதுபோன்றே அவருடைய மகன் பிழைக்கிறான்.
இங்கு அரச அலுவலரின் நம்பிக்கை நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றார். அவர் இயேசுவின் வார்த்தைகளை நம்பினார். அவர் நம்பியது போன்றே நடந்தது. இயேசுவின் வழியில் நடக்கும் நாம் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும், அதுவும் அருமடையாளங்களைக் காணாமலே நம்பிக்கை வைக்கவேண்டும் (யோவா 20: 29). அதுவே இயேசு நம்மிடம் எதிர்பார்க்கின்ற ஒன்று.
சிந்தனை.
‘இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?’ (1 யோவா 5: 5) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.