மார்ச் 17 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்.

உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 21-35
அக்காலத்தில், பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்’ என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.
ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தா’ எனக் கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன்பணியாளர் காலில் விழுந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையில் அடைத்தான்.
அவருடைய உடன்பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றை எல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச்சிந்தனை.
“நிபந்தனையின்றி மன்னிப்போம்”
பல ஆண்டுகளுக்கு முன்பாக துருக்கியர்களுக்கும் அர்மேனியர்களுக்கும் இடையே கடுமையான போர் மூண்டபொழுது, ஒரு துருக்கியப் படைவீரன் அர்மேனியாவில் இருந்த ஓர் அமெரிக்கச் சிறுமியையும் சிறுவனையும் ஓட ஓட விரட்டினான். இருவரும் சகோதரர், சகோதரிகள். அவர்கள் இருவரும் தங்களுடைய உயிரைக் காத்துக்கொள்ள எவ்வளவோ முயன்றார்கள். ஒரு கட்டத்தில் சிறுவனால் ஓட முடியாமல் போகவே, துருக்கியப் படைவீரன் அச்சிறுவனை சிறுமியின் கண்முன்னாலேயே வாளுக்கு இரையாக்கினான்; சிறுமி எப்படியோ அந்தப் படைவீரனிடமிருந்து உயிர் தப்பினாள்.
இதற்குப் பின்பு சிறுமி வளர்ந்து ஒரு மருத்துவமையில் செவிலியராகப் பணிசெய்து வந்தாள். இப்படியிருக்கையில் ஒருநாள் ஒருவன் பலத்த காயங்களோடு அவள் பணிசெய்துவந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான். அவனை உற்றுக் கவனித்தபொழுதுதான் அவளுக்குத் தெரிந்தது, அவன் வேறுயாருமல்ல, தன்னுடைய தம்பியைத் தன் முன்னாலேயே கொன்றுபோட்டவன் என்று. ‘உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இவனை இப்படியே விட்டுவிடலாமா?’ என்று அவள் ஒருவினாடி யோசித்தாள். பின்னர் அவள் தன்னுடைய மனத்தைச் மாற்றிக்கொண்டு, அவனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டாள். அவள் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக படைவீரன் உயிர்பிழைத்தான்.
அவனுடைய உடல்நலம் தேறியதும், தன்னுடைய உயிரைக் காப்பாற்றியது, முன்பு தன்னால் கொல்லப்பட்ட சிறுவனின் சகோதரிதான் என்ற உண்மை படைவீரனுக்குத் தெரிய வந்தது. உடனே அவன் அவளைப் பார்த்து, “நான்தான் உன்னுடைய சகோதரனைக் கொன்றவன் என்று தெரிந்தபின்பும் உன்னால் எப்படி என்னுடைய உயிரைக் காப்பாற்ற முடிந்தது?” என்றான். அதற்கு அந்த செவிலிப் பெண், “நான் வணங்கக் கடவுள், தீமைத் செய்தவர்களுக்கு நன்மையையும் பகைவர்களை மன்னிக்கவும் சொல்லியிருக்கின்றார். அதனால்தான் நான் உங்களுடைய உயிரைக் காப்பாற்றினேன்” என்றான்.
தன்னுடைய சகோதரனைத் தன் கண்முன்னால் கொன்றவனையும் மன்னித்த அந்த செவிலிப் பெண் மன்னிப்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றால் அது மிகையில்லை. நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு நிபந்தனையின்றி மன்னிக்கவேண்டும் என்ற செய்தியை நமக்குக் கற்றுத் தருகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தீங்கு செய்தவர்களை எத்தனை முறை மன்னிப்பது?
நற்செய்தியில் பேதுரு இயேசுவிடம், “என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால், நான் எத்தனை முறை அவரை மன்னிக்கவேண்டும்? ஏழு முறை மட்டுமா?” என்று கேட்கின்றார். பேதுரு இயேசுவிடம் கேட்பதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. யூத இரபிகள், தவறு செய்கின்ற ஒருவரை மூன்றுமுறை மன்னிக்கலாம் என்று சொல்லிவந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில், பேதுரு தான் மிகவும் பெருந்தன்மையாக இருக்கிறேன் என்று இயேசுவிடம் காட்டிக்கொள்ள, ஏழு முறை மட்டுமா? என்று கேட்கின்றார். பேதுரு இயேசுவிடம் இப்படிச் சொன்னதால், இயேசு அவரைப் பாராட்டக்கூடும் என்று நினைத்திருக்கக்கூடும்; ஆனால், இயேசு அவரைப் பாராட்டவில்லை; மாறாக, ஏழுமுறை முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என்று சொல்கின்றார்.
இயேசு பேதுருவைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளின் அர்த்தமென்ன என்பதைத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நிபந்தனையின்றி மன்னிக்கும் கடவுள்
இயேசு பேதுருவிடம், எழுபது தடவை ஏழுமுறை என்று சொன்னதன் மூலம், அவர் சகோதரர், சகோதரிகளை – நம்மை நிபந்தனையின்றி மன்னிக்கச் சொல்கின்றார். இதற்காக இயேசு ஓர் உவமையையும் சொல்கின்றார். இயேசு சொல்லும் உவமையில் வரும் அரசர் தன்னிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்டிருந்தவருடைய கடனைத் தள்ளுபடி செய்கின்றார். அவரோ தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்தவருடைய கடனைத் தள்ளுபடி செய்யாமல், அவரைச் சிறையில் அடைந்ததால், அரசர் அந்தப் பொல்லாத பணியாளரைக் கடைசியில் சிறையில் தள்ளுகின்றார்.
இந்த உவமையில் வருகின்ற அரசர்தான் கடவுள்… மன்னிக்க மறுத்த பணியாளர்தான் நாமெல்லாம். ஆம், கடவுள் நம்மை நிபந்தனையின்றி மன்னிக்கின்றபொழுது, நாம் நம்முடைய சகோதரர், சகோதரிகள் செய்யக்கூடிய பாவங்களை மன்னியாமல் இருக்கின்றோம். இதனால் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகின்றோம். ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்” (மத் 6: 14) என்று கூறுவார். அப்படியானால், நாம் இறைவனிடமிருந்து மன்னிப்பைப் பெற, நம் சகோதரர் சகோதரிகளை மன்னிப்பது இன்றியமையாததாக இருக்கின்றது. இந்த உண்மையை உணர்ந்திருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை.
‘ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்கவேண்டும்’ (கொலோ 3: 13) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் ஆண்டவர் நம்மை மன்னித்தது போல, ஒருவர் மற்றவரை மன்னிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.