மார்ச் 14 : சனிக்கிழமை. நற்செய்தி வாசகம்.

உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32
அக்காலத்தில்
வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
“ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ‘அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.
பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.
தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.
தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும் காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்துகொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.
அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச்சிந்தனை.
“மன்னிக்கும் அன்பு இறைவன்”
முன்பொரு காலத்தில் ஆயன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். தாயில்லாத பிள்ளை என்பதால், அவன் அவளுக்கு மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்து வந்தான். மேலும் தான் ஆடு மேய்க்கச் செல்கின்றபொழுது, தன்னோடு தன் மகளையும் கூட்டிக்கொண்டு போனான். ஆடுகளை மேய்க்கின்றபொழுது அவன் எழுப்புகின்ற ஒலி அவனுடைய மகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவன் அதை அடிக்கடி எழுப்பி அவளை மகிழ்ச்சிப்படுத்தி வந்தான்.
ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. ஆயனுடைய மகள் வளர்ந்து பெரியவள் ஆனாள். அதனால் உயர் படிப்புப் படிப்பதற்காக தொலைதூரத்திலிருந்த பட்டணத்திற்குச் சென்றாள். பட்டணத்திற்கு சென்ற புதிதில் அவள் அடிக்கடி தன் தந்தைக்கு கடிதம் எழுதி வந்தாள். அவளுடைய தந்தையும் அந்தத் கடிதத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நாள்கள் செல்லச் செல்ல, மகளிடமிருந்து கடிதம் வருவது முற்றிலுமாக நின்றுவிட்டது. இதனால் தந்தை மிகவும் மனவேதனை அடையத் தொடங்கினார். இதற்கிடையில் பட்டணத்திலிருந்து வந்த இளைஞன் ஒருவன் ஆயனிடத்தில், “உங்களுடைய மகள், தவறான நண்பர்களோடு சேர்ந்துகொண்டு மிகவும் கெட்டுப்போய்விட்டாள்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். இதைக் கேட்டு அவர் இன்னும் வேதனையடைந்தார். இதனால் அவர் பட்டணத்திற்குச் சென்று, தன்னுடைய மகளை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வந்துவேண்டும் என்று முடிவுசெய்தார்.
மறுநாள் அவர் பட்டணத்தில் தன் மகள் படித்து வந்த கல்லூரிக்குச் சென்றார். அங்கு சென்று அவர் தன் மகளைக் குறித்து விசாரித்துப் பார்த்தபொழுது, அவருடைய மகள் கல்லூரிக்கு வருவதை நிறுத்திப் பல மாதங்கள் ஆகின்றன செய்தியை அறிந்தார். ‘இளைஞன் சொன்னது உண்மையாக இருக்குமோ’ என்கிற பதைபதைப்பில் அவர் அந்தப் பட்டணம் முழுவதும் தேடித் பார்த்தார். அப்படித் தேடும்பொழுது ஆடு மேய்க்கின்றபொழுது எழுப்புகின்ற – தன் மகளுக்குப் பிடித்த ஒலியை எழுப்பிக்கொண்டே தேடினார். பட்டணத்தில் இருந்தவர்களெல்லாம் அவரை ஒருமாதிரிப் பார்த்தார்கள். அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் தேடினார்.
மாலைவேளையில், பட்டணத்திற்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த பகுதியில், தன் குரலை எழுப்பிக்கொண்டு அவர் தேடும்பொழுது, ஒரு பாழடைந்த கட்டத்திற்குள்ளிருந்து ‘இது மிகவும் பழக்கப்பட்ட குரல் போன்றல்லவா இருக்கின்றது’ என்று ஓர் இளம்பெண் வெளியே வந்தாள். அவள் வேறு யாருயல்ல. அந்த ஆயனுடைய மகள். அவள் தன்னுடைய தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்று, அவரைக் கட்டியணைத்துக்கொண்டு, “அப்பா! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் மிகப்பெரிய பாவியாகிவிட்டேன்” என்று கண்ணீர் விட்டு அழுதாள். தந்தையா, “மகளே! நீ எனக்குக் கிடைத்ததே போதும்” என்று சொல்லி அவளை மன்னித்து ஏற்றுக்கொண்டாள்.
தவற்றை உணந்த மகளை எப்படி அந்தத் தந்தை மன்னித்து ஏற்றுக்கொண்டாரோ, அப்படி நம்முடைய விண்ணகத்தந்தை, நாம் நம்முடைய தவற்றை உணர்ந்து, அவரிடம் திரும்பி வருகின்றபொழுது மன்னித்து ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்கின்றார் என்ற செய்தியை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மனம்திருந்தியவர்களை மன்னிக்கும் இறைவன்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, ‘ஊதாரி மைந்தன்’ உவமையைச் சொல்கின்றார். இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்ததும், கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் கைகளைத் தட்டிக் கடவுளுக்கு நன்றி சொல்லியதாக ஒரு மரபு உண்டு. காரணம் மக்கள் அதுவரைக்கும் கடவுளை, தவறு செய்கின்றவர்களைத் தண்டிப்பவராக… ஒரு நீதிபதியா இருப்பார் என்றுதான் நினைத்தார்கள். இயேசு, கடவுளை குற்றங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளக்கூடியவராக, அன்பு காட்டுகின்றவராகச் சொன்னதும்தான் மக்கள் தங்கள் கைகளைத் தட்டி நன்றி சொன்னார்கள்.
ஆம், இந்த உவமையில் வருகின்ற தந்தை தான் உயிரோடு இருக்கின்றபொழுதே, இளைய மகன் சொத்தில் தனக்குரிய பங்கைப் பிரித்து தருமாறு கேட்கின்றபொழுதும், பின் அவன் சொத்தையெல்லாம் ஊதாரித்தனமாக வாழ்ந்து இழந்துவிட்டு, தவற்றை உணர்ந்து திருந்தி வருகின்றபொழுதும் அவனை மன்னிப்பவராகவும் அவன்மீதும் அன்பு செலுத்துபவராகவும் இருக்கின்றார். இவ்வாறு அவர் மன்னிப்பின், அன்பின் உருவாய் இருக்கின்றார்.
மன்னிக்க மறுக்கும் மனிதர்கள்
உவமையில் வருகின்ற தந்தை – விண்ணகத்தந்தை மன்னிக்கின்றவராக, அன்பின் உருவாக இருக்கின்றபொழுது, மூத்த சகோதரனோ, இளையவனை மன்னிக்க மறுப்பவனாகவும் அவனை ஏற்றுக்கொள்ளத் தயங்குபவனாக இருக்கின்றான். இயேசு, மூத்த சகோதரனை பரிசேயர்களை முன்னிறுத்திப் பேசியிருந்தாலும், அது சிலசமயங்களில் தவறு செய்து, பின் திருந்தி வருகின்றவர்களை மன்னிக்கத் தயங்குகின்ற நம்மைக் குறிப்பதாக இருக்கின்றது. ஆம். ஆண்டவராக கடவுள் நம்மை அளவில்லாத வகையில் மன்னித்து, அன்பு செய்கின்றபொழுது, நாமும் நம்மோடு இருப்பவர்கள் செய்கின்ற தவறுகளை மன்னித்து, அன்பு செய்வதுதான் நல்லது.
சிந்தனை.
‘நான் உனக்கு இரக்கம் காட்டியது போல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா!’ (மத் 18: 33) என்று இயேசு சொல்லும் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமையில் வரும் அரசர் சொல்வார். ஆகையால், நாம் விண்ணகத் தந்தையைப் போன்று ஒருவர் மற்றவரை மன்னித்து அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.