தவசு காலத்தின் முதல் ஞாயிற்றுக்குப் பின்னால் திங்கட்கிழமை 6-ம் நாள் தியானம்
இயேசு சம்மனசால் ஆறுதல் சொல்லப்பட்டு இரத்த வேர்வை வேர்க்கிறார்,
1-ம் ஆயத்த சிந்தனை
இயேசுநாதர் தமது இரத்தத்தால் சரீர முழுதும் தோய்ந்து சோபித்திருக்கிறதை நீ பார்ப்பதாக ரூபிகரித்துக்கொள்.
2-ம் ஆயத்த சிந்தனை –
உன் ஞான யுத்தத்தில் தைரியத்தையும் நிலைமையும் தந்தருள மன்றாடுவாயாக.
இயேசுநாதர் அவர்களை (அப்போஸ்தலர்கள்) விட்டு மறுபடியும் போய் அந்த வாக்கியத் தைத்தானே சொல்லி மூன்றாம் முறை செபித்தார்.”
தியானம்
இயேசுநாதர் இருமுறை வேண்டிக் கொண்டும் யாதோர் ஆறுதலும் கிடையாததைக் கண்டு தாம் துவக்கின செபத்தை விடாமல் முன்னைவிட அதிக பக்தியுடனேயும் தாழ்ச்சியுடனேயும் ஏராளமாய்க் கண்ணீர்விட்டு “அப்பா, பிதாவே! இக்கசப்பான பாத்திரத்தை நீக்கக்கூடுமானால் நீக்கும், ஆகிலும் என் மனதின்படியல்ல, உமது சித்தத்தின்படி ஆகட்டும்” என்று மிகுந்த பரிதாபத்தோடு கெஞ்சி மன்றாடுகிறார்.
ஆ! ஆண்டவரே, நீர் ஓர் அடிமையைப்போல் இவ்வகையாய்க் கெஞ்சுவதற்குக் காரணம் என்ன? நிர்ப்பாக்கிய பாவியாகிய நான் கேட்கும் மன்றாட்டை உடனே அடையாததினால் அவதைரியப்படாமல் அதை அடையும் மட்டும் நிலைநின்று மன்றாட வேண்டுமென்று எனக்கு படிப்பிப் பதற்காகத் தேவரீர் முன்மாதிரிகை காட்டினீரல்லாமல் மற்றப்படியல்ல. ஆ! பிதாவானவர் இவ்வளவு பக்தி உருக்கத்துடன் செபிக்கும் தமது திருக்குமாரனுடைய செபத்துக்குக் காது கொடாமலிருக்க, பக்தியும் கவனமும் இன்றி மிகுந்த பராக்கோடும் அவசங்கையோடும் செபிக்கும் அற்பப் பாவிகளாகிய நாம் செய்யும் செபத்தை உடல் அவர் கையேற்றுக் கொள்ளவில்லை என்று நாம் முறையிட்டு துவக்கின செபத்தை விட்டு விடலாமா? நிச்சயம் கூடாது. ஏனெனில் நமது மன்றாட்டுப் பலிக்காமல் போவதற்கு அநேக விக்கினங்கள் உண்டு.
அவையாவன:
முதலாவது, : நாம் கேட்கும் மன்றாட்டுச் சிலவிசை நமது ஆத்துமத்துக்குத் தீமையாயிருக்கலாம்
இரண்டாவது: தகுந்த பக்தி நம்பிக்கை தாழ்ச்சியின்றிச் செய்யும் செபத்திற்கு சர்வேசுரன் செவிகொடுக்கமாட்டார்,
ஆகையால் நாம் அதிக பக்தி கவனத்தோடு வேண்டிக் கொள்ளவும் நாம் கேட்கும் மன்றாட்டை அடையும் மட்டும் நமது செபத்தில் நிலைமையாயிருக்கவும் பழகுவோமாக
பின்னும் அவர் அவஸ்தையாகி அதிக விரிவாய்ச் செபம் செய்திருந்தார் நிலத்தில் சிந்துகிற இரத்தத் துளிகளைப் போலே அவருக்கு வேர்வை உண்டாயிற்று.” சம்மனசானவர் சேசுநாதரைப் பார்த்து நீர் பாடுபடாவிட்டால் உலகத்திலுள்ள மனித ஜாதிகள் அனைவரும் பசாசுக்கு அடிமைகளாகி நித்திய நரக நெருப்பில் தள்ளப்படுவார்கள். ஆகையால் அவர்களுடைய இரட்சணியத்துக்காக இன்று இராத்திரி நீர் ஒரு கள்ளனைப்போல் பிடிக்கப்பட்டுச் சொல்லிலடங்காத நிர்ப்பந்தங்களை அனுபவித்து வீதி வீதியாய் அவமானமாய் இழுக்கப் பட்டுப் பொய்ச்சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டு, பயங்கரமான ஆயுதங்களால் சரீர முழுதும் கிழிக்கப்பட்டு, அநியாயமாய்ச் சாவுக்குத் தீர்வையிடப்பட்டுக் கடைசியாய் ஓர் பாதகனைப்போல் கழுமரத்தில் தொங்கிக் கடின மரணத்தை அடையும்படிச் சர்வேசுரன் தீர்மானித்திருக்கிறாரென்று சொல்லி, மறைந்து போனார்.
இப்பயங்கரமான கட்டளையைக் கேட்டவுடனே நம் அன்புக்குரிய கர்த்தர் அடைந்த துக்கமும் துயரமும் எப்படிப் பட்டதென்றால், அவருடைய திரு உரோமங்கள் சிலிர்த்து, திருச் சரீரம் நடுங்கி, உரோமத் துவாரங்கள் வழியாய் இரத்தம் புறப்பட்டுச் சிந்தவே தமக்கு வந்த கஸ்தி வருத்தத்தைப் பொறுக்கமாட்டாமல் மயக்கமடைந்து தரையிலே விழுகிறார். ஐயோ! அவர் சமுகத்திலிருக்கும் அப்போஸ்தலர்களே, நீங்களாவது எழுந்து போய் நமதாண்டவரைத் தூக்கிவிட்டு, அவருடைய இரத்த வேர்வையைத் துடைத்து அவருக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லலாகாதா? ஆ! எனது நல்ல சேசுவே! நீர் இவ்வளவு கிலேச வருத்தங்களுக்கு உள்ளாவதற்குக் காரணமென்ன? நீர் படவிருக்கும் கஸ்தி நிர்ப்பந்தங்களுக்கும், அடி மிதியும், சிலுவை மரணமுமோ உம்மை இவ்வளவு வியாகுலத்துக்கு உள்ளாக்கினது?
பிரிய சகோதரனே, நமது இரட்சகர் தரையில் கிடந்தபடியே தமது கண்களை ஏறெடுத்து உன் பாரிசமாய்த் திரும்பித் திருவுளம்பற்றும் வார்த்தைகளை உற்றுக்கேள்.
“அவமானமுள்ள கொடிய மரணத்தின் ஞாபகத்தால் இவ்வளவு துக்க துயரம் நமக்கு வந்ததென்று நினைக்க வேண்டாம் உனக்காக நாம் அநுபவிக்கும் மரண அவஸ்தையையும் கஸ்தி நிர்ப்பந்தங்களையும், சிலுவை மரணத்தையும் நீ பார்த்து மனமிரங் காமலும் உன் நடத்தையைத் திருத்தாமலும் பசாசுக்கு அடிமையாய்ப் போகவிருப்பதை நினைக்கும்போது நமது துக்கம் அதிகரிக்கின்றது. நாம் முழங்காலில் இருக்கும் கல்முதலாய்ப் பரிதாபப்பட்டதுபோல இளகும்போது உன் மனம் மாத்திரம் இளகாதிருப்பது ஏன்? ஆ! என் நேசனே, இனியாகிலும் உன் அந்தஸ்துக்குத் தக்கப்படி சீர்திருத்திக் கொண்டு நம்மைப் பின் செல்வாயாக” என்கிறார். ஆகையால் இம்முறைப்பாட்டைக் கேட்கும் என் ஆத்துமமே, இனியாகிலும் நல்ல பிரதிக்கினை செய்துகொண்டு உன் அழைப்புக்குத் தகுந்தபடி சாங்கோபாங்கப் படியில் ஏறப் பிரயாசைப்படுவாயாக.
ஜெபம்
ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, உமது கசப்பான திருப்பாடுகளின் நேரத்தில் வியாகுல வாளால் தன் மகா பரிசுத்த ஆத்துமத்தில் ஊடுருவப்பட்ட உமது திருத்தாயாராகிய மகா பரிசுத்த கன்னிமாமரி, உமது கிருபாசனத்திற்கு முன்பாக, இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் எங்களுக்காகப் பரிந்து பேச வரமருளும்படி உம்மை மன்றாடுகிறோம். பிதாவோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் ஜீவிக்கிறவரும் இராச்சியபாரம் பண்ணுகிறவருமான உலக இரட்சகருமாகிய உம் வழியாக இந்த வரத்தை மன்றாடிக் கேட்கிறோம். ஆமென்.
பரிசுத்த திருக்குடும்பமே எங்களை புண்ணிய வாழ்வு வாழ வழிநடத்துங்கள்
ஆமென்
இயேசுகிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே தொடர்ந்து இந்த தவக்கால நாட்கள் தியானம் ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படும் இந்த தியானங்களை பக்தியோடு தியானித்து நம் வாழ்வை மாற்றுவோம் – ஆமென்
Comments are closed.