மார்ச் 1 : ஞாயிற்றுக்கிழமை. நற்செய்தி வாசகம்

இயேசு நாற்பது நாள் நோன்பிருக்கிறார்; சோதிக்கப்படுகிறார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-11
அக்காலத்தில்
இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அவர் மறுமொழியாக, “ ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.
பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று சொன்னார்.
மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், “நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.
பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.

Comments are closed.