திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன் பிப்ரவரி 27 : நற்செய்தி வாசகம்

என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 22-25
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி, “மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.
பின்பு அவர் அனைவரையும் நோக்கிக் கூறியது: “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார். ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக்கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
லூக்கா 9: 22-25
“இழப்பதற்குத் துணிச்சல் உள்ளவனே வெற்றி பெறுவதற்கும் தகுதியுடையவன் ஆகிறான்”
நிகழ்வு
உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் இரண்டு படங்களை நடித்து முடித்திருந்த நேரத்தில், தான் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்குமாறு லெஹர்மேன் என்ற இயக்குநரிடமிருந்து சார்லி சாப்ளினுக்கு அழைத்து வந்தது. அதை அவர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், “என்னிடம் ஒரு கதை இருக்கின்றது. அதை நானே இயக்கி, நானே நடிக்கப்போகிறேன். நிச்சயமாக இந்தப் படம் வெற்றி பெறும்.”
சார்லி சாப்ளினின் இந்த முடிவை இயக்குநர் லெஹர்மேன் ஏற்றுக்கொண்டாலும், அந்தப் படத்தைத் தயாரிக்கவிருந்த தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ளவில்லை. “நீ இயக்கி, நீயே நடித்தால் அந்தப் படத்தை யார் பார்ப்பார்கள்?. பெரிய நட்டம்தான் ஏற்படும்” என்று தயாரிப்பாளர் பின்வாங்கினார். அப்பொழுது சார்லி சாப்ளின் அவரிடம், “என்னை நம்புங்கள். நான் இயக்கி, நடிக்கும் படம் நிச்சயம் வெற்றிபெறும்” என்று உறுதியாகச் சொன்னார்.
“நீ சொல்வது போல் படம் வெற்றிபெற்றால் பரவாயில்லை. ஒருவேளை படம் தோல்வியடைந்தால் தயாரிப்புச் செலவு முழுவதையும் வட்டியோடு திருப்பித் தரவேண்டும். இதற்குச் சம்மதமா?” என்றார் தயாரிப்பாளர். “எனக்கு என்மீதும் நான் இயக்கப்போகும் படத்தின்மீதும் முழுமையான நம்பிக்கை இருக்கின்றது. ஒருவேளை படம் தோல்வியைத் தழுவினால், தயாரிப்பிற்கான முழுப் பணத்தையும் வட்டியோடு உங்களுக்குத் திருப்பித் தருவதுடன், நடிப்பதிலிருந்தே விலகிக்கொள்கின்றேன்” என்று சவால் விட்டார் சார்லி சாப்ளின்.
இதற்குப் பின்பு சார்லி சாப்ளின் ‘காட் இந்த த ரெயின்’ என்ற படத்தை இயக்கி நடிக்கத் தொடங்கினார். படம் யாரும் எதிர்பார்த்திராத வகையில் பெரும் வெற்றியை. அது சார்லி சாப்ளினுக்குப் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது. அன்றிலிருந்து சார்லி சாப்ளின் தானே திரைப்படங்களை இயக்கி நடிக்கத் தொடங்கி, புகழ்பெற்ற நகைசுவை நடிகரானார்.
சார்லி சாப்ளினால் இவ்வளவு பெயரையும் புகழையும் சம்பாதிக்க முடிந்தது என்றால், அதற்கு முக்கியமான காரணம், அவர் எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருந்ததுதான். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இழப்பதே சீடத்துவ வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகின்றது என்று கூறுகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தன்னை இழப்பதும் சிலுவையைத் தூக்கிக்கொண்டு செல்லுதலும்
நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய பாடுகளை முன்னறிவிக்கின்றார். அதை அறிவித்து முடித்தவுடன், தன்னைப் பின்பற்றி வருகின்றவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை இயேசு எடுத்துரைக்கின்றார். இயேசு தன்னைப் பின்பற்றி வருகின்றவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றபொழுது, இரண்டு நிபந்தனைகளை முன் வைக்கின்றார். ஒன்று, தன்னைத் துறத்தல். இரண்டு, தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு தன்னைப் பின்தொடர்தல்.
தன்னைத் துறத்தல் என்கிறபொழுது, ஒருவர் தன்னை முற்றிலுமாகத் துறந்து அல்லது இயேசுவுக்குத் தன்னுடைய வாழ்வில் முதன்மையான இடம் கொடுத்து வாழ்வதாகும். அடுத்ததாக, நாள்தோறும் சிலுவையைத் தூக்கிக்கொண்டு பின்தொடர்ந்தல் என்கிறபோது, இயேசுவுக்காக, அவர் பொருட்டு சிலுவை போன்ற மிகவும் கொடூரமான துன்பங்களையும் தாங்கிக்கொண்டு அவரைப் பின்தொடர்வதாகும். இதை ஒருவர் செய்கின்றபொழுது அவர் இயேசுவின் சீடராக மாறுகின்றார்.
இழக்கத் தயாராக இருப்போர் வாழ்வைக் காத்துக்கொள்கின்றனர்
தன் சீடராக இருப்பதற்கு இயேசு முன் வைக்கும் நிபந்தனைகளுக்கு அஞ்சி அல்லது அவற்றைக் கடைப்பிடிப்பது மிகக் கடினம் என்று ஒருவர் எதையும் இழக்கத் துணியாமலும் துன்பங்களைத் துணிவுடன் ஏற்கத் துணியாமலும் இருந்து, உலகப் போக்கின்படி வாழ்ந்தால், அவர் இந்த உலகம் தருகின்ற எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர் வாழ்வை இழந்துவிடுவார். மாறாக, இயேசு முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு பணிந்து எவர் ஒருவர் தன்னுடைய வாழ்வை இழக்கத் துணிகின்றாரோ, அவர் தன்னுடைய வாழ்வைக் காத்துக்கொள்ளக்கூடியவராக இருக்கின்றார். இதில் நாம் உலகநாட்டத்தின் படி நடந்து வாழ்வைத் தொலைக்கப் போகின்றோமா? அல்லது இயேசுவின் சீடராக இருந்து, வாழ்வைக் காத்துக்கொள்ளப் போகிறோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்.. அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்’ (யோவா 12: 24) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவுக்காக, இறையாட்சியின் விழுமியங்களுக்காக நம்மையே இழக்கத் தயாராக இருந்து, இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.