பாலியல் கொடுமைகள் குறித்து, இந்திய ஆயர் பேரவை

உரையாடல்: உண்மை மற்றும், பிறரன்புக்குப் பாதை” என்ற மையக்கருத்துடன், இந்தியாவின் பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ஆயர் பேரவையின் ஆண்டு நிறைவுக் கூட்டத்தில், பாலியல் கொடுமைகளைக் குறித்து, இந்திய ஆயர் பேரவை சிறிதளவும் சகித்துக்கொள்ளாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக்கொடுமையில் ஈடுபட்டோர், திருஅவையில் எந்நிலையில் இருந்தாலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய ஆயர் பேரவை, சிறிதும் தயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் கொடுமைகள் குறித்த புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டதும், குற்றம் புரிந்தோரை விரைவில் விசாரித்து, தகுந்த வழிமுறைகளில் தண்டனைகள் வழங்கும் நடவடிக்கைகளை உறுதி செய்வதாக இந்திய ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

இத்தகையக் குற்றங்கள் நிகழும் வேளையில், பொது நிலையினர், எவ்வித முறைகளில், அவற்றை, திருஅவை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது என்பதை அறியாதிருப்பதே, பெரும் குறையாக உள்ளது என்று, மனித உரிமை ஆர்வலரான, அருள் சகோதரி ஜூலி ஜார்ஜ் அவர்கள் கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு, தன் 75வது ஆண்டை நிறைவு செய்த இந்திய ஆயர் பேரவையில், இந்தியாவின் இலத்தீன், சீரோ-மலபார், சீரோ-மலங்கரா ஆகிய மூன்று வழிபாட்டுமுறைகளின் 174 மறைமாவட்டங்களைச் சார்ந்த ஏறத்தாழ 200 ஆயர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

Comments are closed.