january 22nd : நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் எது செய்வது முறை? உயிரைக் காப்பதா, அழிப்பதா?

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6.

இயேசு மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். இயேசு கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார். பின்பு அவர்களிடம், “ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

தொடர்ந்து) நன்மை செய்வோம்

நிகழ்வு

முன்பொரு காலத்தில் பாக்தாத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். ஒருநாள் அவர் – இளவரசர் ஆற்றில் குளிக்கச் சென்றார். குளிக்கும்பொழுது அவர் திடீரென மாயமானார். அவரோடு இருந்தவர்கள் இளவரசர் மாயமானதை அறிந்து திடுக்கிட்டுப் போனார்கள். உடனே அவர்கள் அரசரிடம் சென்று நிகழ்ந்த அனைத்தையும் எடுத்துச் சொன்னார்கள். அரசர் தன் மகன் ஆற்றில் மாயமானதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார். பின்னர் அவர் நாட்டு மக்களிடம், இளவரசரை மீட்டுத் தருகின்றவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இளைஞரைத் தேடும் வேட்டை தொடங்கியது. பலரும் ஆற்றில் மாயமான இளவரசரைத் தேடும் முயற்சியில் இறங்கினார்கள்.

ஒருநாள், இரண்டு நாள் என்று நாள்கள் சென்றுகொண்டே இருந்தன. இளவரசர் மட்டும் யாருடைய கண்ணுக்கும் தெரியவில்லை. ஒருவாரம் கழித்துத்தான் இளைஞன் ஒருவன், ஆற்றின் ஓரத்தில் இருந்த ஒரு குகையில் இளவரசர் பத்திரமாக இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தான். பின்னர் அவன் இளவரசரை மீட்டுக்கொண்டு வந்து, அரசரிடம் ஒப்படைத்தான். இளவரசர் நலமாகவும் திடகாத்திரமாகவும் இருப்பதைக் கண்டு அரசர் மிகவும் மகிழ்ந்தார்.

“ஒருவார காலம் ஆற்றுக்குள் இருந்திருக்கின்றாய்…? எப்படி உன்னால் இந்தளவுக்கு நலமாகவும் திடகாத்திரமாகவும் இருக்க முடிகின்றது…?” என்று அரசர் இளவரசரிடம் கேட்டதற்கு இளவரசர், “நான் இருந்த பகுதியில் ரொட்டித் துண்டுகள் தண்ணீரில் மிதந்துகொண்டு வந்தன. ‘முசலேம்’ என்று முத்திரையிடப்பட அந்த ரொட்டித் துண்டுகளை எடுத்து உண்டதால்தான் நான் இந்தளவுக்கு நலமாகவும் திடகாத்திரமாகவும் இருக்கின்றேன்” என்றார். இதற்குப் பின்பு அரசர் ‘முசலேம்’ என்பவர் யார் எனக் கண்டுகொண்டு, அவரை அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு வருமாறு தன்னுடைய படைவீரர்களுக்கு உத்தரவிட்டார். படைவீரர்களும் நீண்ட நெடிய தேடலுக்குப் பின்பு முசலேமை அரசரிம் அழைத்து வந்தார்கள்.

“நீர்தாம் முசலேமா? நீர்தாம் ஆற்றில் ரொட்டித் துண்டுகளைப் போடுபவரா?” என்று அரசர் கேட்டதற்கு அவர், “ஆமாம், நான்தான் முசலேம்… நான்தான் ஆற்றில் ரொட்டித் துண்டுகளைப் போடுபவன்” என்றார். அதற்கு அரசர் அவரிடம், “இப்படிப்பட்ட செயலை நீ செய்வதற்குக் காரணமென்ன…? இதனை நீ எத்தனை நாள்களாகச் செய்து கொண்டிருக்கின்றாய்?” என்றார் அரசர். “நாம் செய்யும் ஒரு சிறு நன்மை அடுத்தவருக்குப் பெரிய அளவில் பயன்படும் என்ற நோக்கத்தில் பல ஆண்டுகளாக இதைச் செய்துகொண்டிருக்கின்றேன்” என்றார் முசலேம். முசலேம் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அரசர் பெரிதும் மகிழ்ந்து, அவருக்கு ஐந்து நகர்களைத் தானமாகத் தந்தார்.

நன்மை செய்யவேண்டும்… அதுவும் தொடர்ந்து நன்மை செய்யவேண்டும். அப்படிச் செய்தால் அதற்கான பலன் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும் என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசமும் நன்மை செய்பவர்களாக வாழ அழைத்துத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஓய்வுநாளில் நன்மை செய்த இயேசு

நற்செய்தியில் இயேசு கைசூம்பிய மனிதரைக் குணப்படுத்துகின்றார். அவர் அந்த மனிதரைக் குணப்படுத்துகின்ற நாளோ ஓர் ஓய்வுநாள்.

‘ஓய்வுநாளின் தூய்மையை கெடுக்கிறவன் கொல்லப்படவேண்டும்; அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்’ (விப 31: 14-17) என்று சொல்லும் மோசேயின் சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், ஓய்வுநாளில் இயேசு கைசூம்பிய மனிதரை எப்பொழுது நலப்படுத்துவர்… அவர்மீது எப்பொழுது குற்றம் சுமத்தலாம் என்று கொலைவெறியோடு பரிசேயக் கூட்டம் மறுபக்கம் இருந்தாலும், இயேசு யாரைப் பற்றியும் நினைத்துக் கவலைப்படாமல் கைசூம்பிய மனிதரை நலப்படுத்துகின்றார். இன்னும் சொல்லப்போனால் இயேசுவுக்கு முன்பாக கைசூம்பிய மனிதர் நலம்பெறுவது மட்டும் தெரிந்தது; வேறு எதுவும் தெரியவில்லை. அதனாலேயே இயேசு அவரை நலப்படுத்துகின்றார்.

இயேசுவின் இத்தீரமிக்க செயல் நமக்கு உணர்த்துகின்ற செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான் நாம் எத்தகைய இடர்வரினும் நன்மை செய்வதற்கு மட்டும் சோர்ந்துபோகக்கூடாது என்பதாகும் .புனித பவுலும் இதைத்தான், “நீங்கள் நன்மை செய்வதில் மனந்தளரவேண்டாம் (1 தெச 3:13) என்பார். எனவே, நாம் தேவையில் உள்ள மக்களுக்கு எல்லாச் சூழ்நிலையிலும் நன்மை செய்யக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

‘இயேசு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்’ (திப 10: 38) என்கிறது இறைவாரத்தை. ஆகையால், நாம் எங்கும் எல்லாச் சூழ்நிலையிலும் நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.