டிசம்பர் 27 : நற்செய்தி வாசகம் ,புனித யோவான் – திருத்தூதர், நற்செய்தியாளர் விழா

மற்ற சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 2-8

வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்.

இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

திருத்தூதர் புனித யோவான்

1 யோவான் 1: 1-4

“கேட்டோம்; கண்டோம்; சான்று பகர்கின்றோம்”

நிகழ்வு

அது ஒரு கிராமப்புறப் பங்கு. அப்பங்கில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக்கொண்டிருந்த குருவானவர் ஒருவர், ஒருநாள் மாலைவேளையில் பக்கத்துக் கிராமத்திற்கு தன்னுடைய இருசக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார். அப்படி செல்லும்போது ஊருக்கு வெளியில் இருந்த ஒரு குடிசைக்கு அருகில் வந்ததும் ஏதோ ஓர் உள்ளுணர்வு அவரை, “இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி. ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என்ற இறை வார்த்தையைத் சொல்லத் தூண்டியது. உடனே அவர் அந்த இறைவார்த்தையைச் சொன்னார். மீண்டுமாக அவருக்கு அதே உள்ளுணர்வு தோன்ற அவர் அவ்வார்த்தைகளை மீண்டுமாக உச்சரித்துவிட்டுப் பக்கத்து கிராமத்திற்குத் திருப்பலிக்குச் சென்றார்.

இது நடந்து ஆறு மாதங்கள் கழித்து அவர் அந்தக் கிராமத்தில் இருந்த எல்லா விடுகளையும் சந்திக்கச் சென்றார். ஊருக்குள்ளே இருந்த வீடுகளைச் சந்தித்துவிட்டு, ஊருக்கு வெளியே இருந்த குடிசைக்குள் சென்றார். அங்கு ஒரு பெண்மணி இருந்தார். அவருக்கு அருகில் குழந்தை இருந்தது. பங்குத்தந்தை அந்தப் பெண்மணியிடம், “அம்மா உங்களுடைய ஆன்மிக வாழ்க்கை எப்படி சென்றுகொண்டிருக்கிறது” என்றார். பதிலுக்கு அந்தப் பெண்மணி, “சுவாமி! நான் ஆறுமாதங்களுக்கு முன்புவரை மிகப்பெரிய பாவியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒருநாள் யாரோ ஒருவர் ‘இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி. ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவங்களை போக்குபவர்’ என்ற வார்த்தைகளை இரண்டுமுறை சொல்லிவிட்டு சென்றார். அவ்வார்த்தைகள் என்னைச் சிந்திக்க வைத்தன. இயேசு என்னுடைய பாவங்களை மன்னிக்கிறார் என்றால் நான் மனமாற்றம் அடையவேண்டும் என்று நான் சிந்திக்கத் தொடங்கி, நல்லதொரு வாழ்க்கை வாழத் தொடங்கினேன். அதனால் என்னுடைய ஆன்மிக வாழ்க்கை நன்றாகச் சென்றுகொண்டிருக்கின்றது” என்றார்.

இதைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த பங்குத்தந்தை, “அந்த வார்த்தைகளைச் சொன்னவர் வேறு யாருமல்லர், நான்தான்” என்றார். அப்பொழுது அந்தப் பெண்மணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

இந்த நிகழ்வில் வரக்கூடிய பங்குத்தந்தை ஆண்டவரைக் குறித்து அறிவித்தார் அல்லது சான்று பகர்ந்தார். அதனால் அந்த பெண்மணி மனமாற்றம் அடைந்தார். இன்று திருஅவை ஆண்டவரைக் குறித்து சான்று பகர்ந்த யோவானின் விழாவைக் கொண்டாடுகின்றது. இவருடைய விழாவில் நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைச் சொல்கிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை குறித்து கேள்விப்பட்ட யோவான்

இன்றைய முதல்வாசகத்தில் யோவான், “தொடக்க முதல் இருந்த வாழ்வளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்களால் கண்டோம்; அவருக்குச் சான்று பகர்கின்றோம்” என்கின்றார். யோவான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து நிச்சயம் கேள்விப்பட்டு இருக்கவேண்டும். பழைய ஏற்பாட்டு காலத்தில் இறைவாக்கினர்கள் மெசியாவாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து சொன்ன செய்திகளை அவர் அவருடைய பெற்றோர் வழியாக, அவரோடு இருந்தவர்கள் வழியாகக் கேட்டிருக்கவேண்டும்; அதைக் குறித்துத் தியானித்திருக்க வேண்டும் அதனால்தான் அவரால் நாங்கள் அவரைக் குறித்து கேட்டோம் என்று சொல்ல முடிகின்றது.

இயேசுவைக் கண்களால் கண்ட யோவான்

யோவான் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவரைக் கண்களால் கண்டார். அதனால்தான் அவரால் ஆண்டவரைக் கண்டோம் என்று சொல்ல முடிகின்றது. இயேசுவை காண்பது எல்லாருக்கும் கிடைக்காத பேறு. அப்படிப்பட்ட பேறு யோவானுக்குக் கிடைத்தது. நம்மால், நம்முடைய ஊனக் கண்களால் பார்க்க முடியாவிட்டாலும் ஞானக்கண்களால் பார்க்கமுடியும் என்பதால் நாமும் பேறுபெற்றவர்கள்தான்.

இயேசு கிறிஸ்துவைக் குறித்து சான்ற பகர்ந்த யோவான்

யோவான் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டவர் மட்டுமல்ல. அவரை கண்டவர்; அவரைக் குறித்துச் சான்றுபகர்ந்தவர். அதனால்தான் அவரால் அப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்ல முடிகின்றது. யோவான் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சான்று பகர்ந்தார் என்றால், நாம் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சான்று பெறவேண்டும். காரணம், இயேசு இந்த உலகத்தைவிட்டுச் செல்வதற்கு முன்பாக, தன் சீடர்களிடம் “நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற் 16: 15) என்றார்.

எனவே, யோவானின் விழாவைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று இயேசுவுக்குச் சான்றுபகர்ந்து, அதன்மூலம் அவருடைய அன்புக்குரிய மக்களாவோம்.

சிந்தனை

‘காணாமல் நம்புவோர் பேறுபெற்றோர்’ (யோவா 20:29) என்பார் இயேசு. ஆகையால், காணாமலேயே இயேசுவை நம்பி, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் யோவானைப் போன்று இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.