இளையோருக்கான நத்தார் “கரோல்” பாடல் போட்டி யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர்கூடத்தில்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இளையோருக்கான நத்தார் “கரோல்” பாடல் போட்டி யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர்கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில் இளவாலை, தீவகம், பருத்திதுறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய மறைக்கோட்டங்களில் இருந்து 20 இளையோர் குழுக்கள் பங்குபற்றின. இப்பாடல் போட்டியில் பாடப்பட்ட பாடல்கள் அனைத்தும் இளையோரால் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்ட புத்தாக்க பாடல்களாகவும் கொடுக்கப்பட்ட மைய கருவாகிய “மீண்டும் எம்மண்ணில் பிறப்பாயோ” என்பதனை ஒட்டியதாக அமைந்திருந்ததுடன் நடுவர்களின் பாராட்டினையும் பெற்றிருந்தது. இப்போட்டியில் 1ம், 2ம், 3ம் இடங்களை முறையே மரிசன்கூடல் பங்கு, மல்வம் பங்கு, பருத்தித்துறை பங்கு இளையோர் குழுக்கள் பெற்றுக் கொண்டனர். இப்போட்டியில் பங்குபற்றிய குழுக்களுக்கு நினைவு பரிசில்களும் வெற்றியீட்டிய குழுக்களுக்கு வெற்றி கேடயமும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்திரு யேக்கப் நீக்கிலஸ் அடிகளார் கலந்து சிறப்பித்தார். கடந்த வருடத்தைவிட இம்முறை அதிகமான இளையோர் குழுக்கள் ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்குபற்றியதுடன் 300க்கு அதிகமான இளையோர் இணைந்து கெண்டமையும் சிறப்பான விடயமாக இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Jaffna RC Diocese

 



Comments are closed.