வாழ்வுக்கு சான்று பகர்தலும், மனித மாண்புக்கு உழைத்தலும்

கத்தோலிக்கப் படிப்பினைகளால் தூண்டப்பட்ட அரசு சாரா இயக்கங்களின் தலைவர்களை, இச்சனிக்கிழமை காலை, திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகை, அனைவருக்கும் உரிய பொது இல்லமாக மாற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.

கடைநிலையில் உள்ளோர் ஏற்றுக்கொள்ளப்படவும், அவர்கள் இவ்வுலகில் ஓர் அங்கமாக மாறவும், இந்த அமைப்புக்கள் உழைப்பதன் வழியாக, இவ்வுலகை ஒரே குடும்ப உணர்வுடையதாக மாற்ற உதவுகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, நேரடியாக இம்மக்களிடையே பணியாற்றுவதன் வழியாகவும், அரசுகள் மற்றும் அரசியல் களத்தில் உள்ள தங்கள் தொடர்புகள் வழியாகவும் இவ்வமைப்பினர் உதவி வருகின்றனர் என்று மேலும் எடுத்துரைத்தார்.

தங்கள் அங்கத்தினர்களுக்கு பயிற்சி வழங்குதல், போதிய வழிவகைகளைக் கொண்டிருத்தல், ஒன்றிணைந்து புதிய பணிகளைத் துவங்குதல் போன்றவை குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து, வாழ்வுக்கு சான்று பகர்தல், மற்றும், மனித மாண்புக்கு உழைத்தல், ஆகியவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

சில திட்டங்களை செயல்படுத்த முனையும்போது போதிய பொருள் வசதி இல்லா நிலையில், மனதைத் தளரவிடாமல், சிறியவற்றைக் கொண்டு, பெரியவற்றை ஆற்றமுடியும் என்ற நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லவேண்டும் என எடுத்துரைத்தத் திருத்தந்தை, ஏனைய கத்தோலிக்க அமைப்புக்களுடன் இணைந்து உழைக்க வேண்டிய அவசியம் குறித்தும், ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடல் பாதையின் முக்கியத்துவம் குறித்தும் மேலும் கூறினார்

Comments are closed.