ஆண்டவர் வருகையை முன்னறிவிக்க பாலைவனத்து குரலொலி

ஆண்டவர் வருகையை முன்னறிவிக்க பாலைவனத்து குரலொலியாக, அவரது பாதையைச் செப்பனிடும் கருவியாக திருமுழுக்கு யோவான் முன்னனுப்படுகின்றார். அவர் நெஞ்சிலே கள்ளமில்லை; சிந்தையிலே குழப்பமில்லை! அவர் யாரையும் வேரறுக்க வந்தவரல்ல; அநீதிக்குத் துணை நின்றவருமல்ல! நீதியை எடுத்துச் சொல்வதில் இடி போல முழங்கியவர்; தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் தீவிரமாய் நின்றவர்! தன் பணியை வேறு யாருக்கும் – எந்தக் காரணத்திற்காகவும் – கையளித்தவரல்ல. ஆபத்துக்கள் தனைச் சூழ வரும்போதும், தன் பணி, வரவிருக்கின்றவருக்காக மனிதர்களை ஆயத்தப்படுத்துவதுதான் என்ற தெளிவோடு செயற்பட்டு நின்றவர். இதனால் குற்றங்களை அகற்றி விட்டு ஒவ்வொருவரையும் தூய்மைப்படுத்தும்படி வெளிப்படையாகவே கூறி நின்றார்.

அவர் எதற்காக ஈடுபட்டாரோ அதற்கேற்றவராகத் தன்னை எந்நேரமும் தூய்மையாக வைத்துக் கொண்டார். அவர் நீதிமானாக இருந்தார். தவறுகளுக்குட்பட்டவராக இருந்ததில்லை. இதனால் ஆட்சியாளர்கள் கூட அவர் எவ்வளவுதான் தங்களைக் குறை சொல்லி நின்றாலும் தம் அதிகாரத்தைக் கொண்டு அவரை அடக்க எண்ணியதில்லை. சொல்லப்போனால் தங்களையிட்டு அவர் வாயிலிருந்து வரக் கூடிய சொற்களை எண்ணி அஞ்சினார்கள். தவறுகளும், தப்புக்களும் நீதி, நியாயங்களைக் கண்டு அஞ்சவே செய்கின்றன. அவை கடவுளுக்குரிய அம்சங்கள்! கடவுள் நீதியுள்ளவராக இருக்கின்றார். அவர் நியாயம் காலமுள்ளவரை நிலைத்திருக்கின்றன.

திருமுழுக்கு யோவான் கடவுளைத் தன் அரணாகக் கொண்டிருந்தார். சிறு வயது முதலே மெசியாவுக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டவர் அவர். தன்னைத் தன் தேவன் எதிரிகளின் முன் சிறுமைப்படுத்தமாட்டார் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர். தன் பணி நிறைவேறுந் தனைக்கும் தனக்கு எந்த கெடுதலும் வரமாட்டாது என்பதிலே கடவுளில் முழு நம்பிக்கை கொண்டிருந்தவர்.

தனக்குரிய வார்த்தைகளைத் தன் தேவன் தன் நாவிலே வைப்பார் என்று தெரிந்தவராக கடவுளின் செய்தியை முன்னறிவிக்கின்றவராக திரு முழுக்கு யோவான் முன் செல்கின்றார். ‘மனந்திரும்புங்கள்’ என்று வலியுறுத்துகின்றார். தன்னை முற்றிலும் இறைவனிடம் ஒப்படைத்து, அவர் கைக் கருவியாகவே தன்னை உருவகித்து தனக்கென தரப்பட்ட பணியைச் செய்து நிற்கின்றவராக திருமுழுக்கு யோவானை நாம் காண்கின்றோம்.

ஆனாலும், நம் மத்தியில் வாழும் சிலபேர் போல, அன்றும் நேரடியாகச் சாதிக்க முடியாதவற்றை மற்றவரூடாகச் சாதிக்க முனைபவர்கள், தம் ஆற்றலால் திறமையால் செய்ய முடியாதவற்றை குறுக்கு வழியால் நிறைவேற்றிக் கொள்ள முனைபவர்கள், தம்மை நற்பாதையிலே திசை திருப்ப விரும்பாத சீவன்கள், தம் போக்கிற்குத் தடையாக இருப்பவற்றை எப்படியாவது அகற்றி விட வேண்டுமென முயன்று நிற்பவர்கள் இருக்கவே செய்தார்கள்.

திருமுழுக்கு யோவானும் அந்த வழியில் அகற்றப்பட்டார். ஆனாலும் அவர் தன் பணியைச் செவ்வனே நிறைவேற்றிய திருப்தியுடன் தன் முடிவைக் கண்டு அஞ்சாமல் வாழ்ந்தார் – மடிந்தார். வரவிருந்தவரைத் தம் கண்களாலே தரிசித்தார். எவர் கையால் திரு முழுக்கை அவர் பெற எதிர்பார்த்திருந்தாரோ அவருக்கே அவர் நீரினால் திருமுழுக்கு அருளி மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டதில் அவருக்கு திருப்தி ஏற்படாமல் இருக்க முடியாது.

இந்த நாளில் நமக்கான சிந்தனை நாம் யாராக இருக்கின்றோம் என்பதுதான். கடவுளை முழுதாக ஏற்று, அவருக்காக என் கடமையை நிறைவேற்றுகின்ற கருவியாக நாம் வாழ்வதுண்டா? அப்படியான வாழ்வை மேற்கொண்டிருக்கின்ற நாம், நாம் சொல்ல வேண்டியதை, செய்ய வேண்டியதை இறைவன் தாமே வேளைக்கு எனக்கு வெளிப்படுத்துவார், என்னிலிருந்து வெளிவரப் பண்ணுவார் என்கிற உறுதியான விசுவாசத்தோடு முன் செல்லுகின்றோமா? கடவுள் எனது அரணும் பாறையாகவும் இருக்கின்ற வரையில் எதற்கும் நான் அஞ்சவேண்டியதில்லை என்ற தளாராத நம்பிக்கை கொண்டு வாழுகின்றவர்களாக இருக்கின்றோ

Comments are closed.