நற்செய்தியை வாழ்வின் கையேடாகக் கொண்டிருங்கள் – திருத்தந்தை

அர்ப்பணிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் நற்செய்தியை தங்கள் வாழ்வின் கையேடாகக் கொண்டு வாழவேண்டும் என்றும், ஓடுகின்ற தண்ணீர் மற்றும் சாரமுள்ள உப்பை போன்று அர்த்தமுள்ள வாழ்வு வாழ வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 13 வெள்ளிக்கிழமை வத்திக்கானில் புனித அகுஸ்தின் துறவுசபைகளின் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுவினரை சந்தித்துப் பேசியபோது இவ்வாறுக் கூறிய திருத்தந்தை, காலத்தின் சூழ்நிலைகள், இடங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு ஏற்றவாறு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் வாழ்வு எப்போதும் நற்செய்தியின் ஒளியில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஓடுகின்ற தண்ணீர் மற்றும் சாரமுள்ள உப்பைப் போன்று அர்த்தமுள்ள வாழ்வாக இருக்கவேண்டும் என்றும், இதனால் சோதனையிலிருந்து  நம்மை விலக்கி, கிறிஸ்துவை நமது வாழ்வின் மையமாக மீண்டும் கொண்டு வந்து அவர் மீது நாம் கொண்ட முதல் அன்பை உணர்த்தி ஆற்றலாகவும் வாழ்வாகவும் நம்மில் அவர் அன்பு செயல்படும் என்றும் திருத்தந்தை கூறினார்.

அர்ப்பண வாழ்வு வாழ்பவர்கள் கடவுளைத் தேடுவதையே தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், கடவுளை சமுதாயத்தில்,  மறை நூல்களைப் படிப்பதில், அன்றாட மறைப்பணியில், உடன் வாழும் மனிதர்களில் நிகழ்காலத்தின்  உண்மைகளில் தேட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

எவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதனாலோ, அல்லது தங்கள் சொந்த பலத்தினாலோ எதிர்காலத்தை உருவாக்குவதில்லை மாறாக சந்தித்தல், உரையாடல், செவிமடுத்தல், போன்றவற்றின் வழியாகவும், ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகள் வழியாகவும் எதிர்காலத்தை உருவாக்குகின்றோம் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

Comments are closed.