என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தவரும், வாழும் கடவுளுமாகிய ஒரே இறைவனிடம் நம்மைக் கரம் பிடித்து வழி நடத்திச் சென்றவர் அவர். நம்பிக்கையின் மகிழ்வையும் எதிர் நோக்கின் வாழ்வையும் கிறிஸ்துவில் மீண்டும் கண்டறிய அவர் நமக்கு உதவுவாராக.

தெளிந்து தேர்தலில் ஆன்மிகத்துணை என்ற கருப்பொருளில் இன்றைய நாள் கருத்துக்களை உங்களுக்கு வழங்க விரும்புகின்றேன். சுய அறிவுக்கு மிக முக்கியமானதும் முதன்மையானதுமான ஆன்மிகத்துணை தெளிந்து தேர்தலில் தவிர்க்க முடியாத நிபந்தனைகளுள் ஒன்றாகும். நம்மில் உள்ள கடவுளின் அருள் எப்போதும் அதன் இயல்பில் இயங்குகின்றது. மாற்கு (4:3-9) நற்செய்தியில் குறிப்பிடப்படும் விதைப்பவர் உவமையில் கடவுளின் அருளை நல்ல விதைக்கும் நமது இயல்பை நிலத்திற்கும் ஒப்பிடலாம். முதலாவதாக, நம்மைப்பற்றி நாம் மிகவும் தெரிந்து கொள்வது முக்கியம். நமது பலவீனங்கள், உணர்வுகள் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்கு தயங்கக் கூடாது. பலவீனம் என்பதும் உண்மையில் செழுமையே. அதை நாம் மதிக்கவும் வரவேற்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அது கடவுளிடம் ஒப்படைக்கப்படும் பொழுது, நம்மை மென்மை, கருணை, மற்றும் அன்பின் திறன் கொண்டவர்களாக மாற்றுகின்றது. தூய ஆவியின் கீழ்ப்படிதல் கொண்ட ஆன்மிகத்துணை, நம்மைப்பற்றியும் இறைவனுடனான நமது உறவையும் அறிந்து, நமது தவறான புரிதல்களின் முகத்திரைகளைக் களைய உதவுகின்றது.. இயேசுவுடனான உரையாடல்களை தெளிவுபடுத்துவதற்கு நற்செய்தி பல்வேறு எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது. உதாரணமாக, சமாரியப் பெண், சக்கேயு, பாவியான பெண், நிக்கொதேம், எம்மாவு சீடர்கள், போன்றவர்கள் இயேசுவை உண்மையாக சந்தித்துத் தங்கள் இதயங்களை திறந்தவர்கள். தங்கள் பலவீனங்கள் மற்றும் இயலாமையை இயேசுவின் முன் வைக்கத் தயங்காதவர்கள். அவர்களது  சுயப்பகிர்வின் வழியாக மீட்பையும் மன்னிப்பையும் இலவசமாகப் பெற்றவர்கள்.

நமது வாழ்வையும் தேடல்களையும் இயேசுவின் முன்னும் பிறர் முன்னும் வெளிப்படுத்தும் பொழுது, நம்முள் இருக்கும் பல்வேறு எண்ணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடிகின்றது. நான் எல்லாவற்றையும் தவறாக செய்துவிட்டேன், நான் மதிப்பற்றவன், யாரும் என்னைப் புரிந்து கொள்ள மாட்டார்கள், நான் ஒருபோதும் வெற்றியடைய மாட்டேன், தோல்வியைப் பெற விதிக்கப்பட்டவன் என்பன போன்ற பொய்யான தீமையான எண்ணங்கள் மற்றொருவருடன் பகிரப்படும் பொழுது நம்முடைய முகத்திரையை அவிழ்க்க உதவுகிறது. இதனால், நாம் இறைவனால் அன்பு செய்யப்படுகின்றோம், மதிக்கப்படுகின்றோம். நம்மால் அப்படிப்பட்டவர்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணர்ந்து, எப்பொழுதும் நம்மில் இருக்கும் நன்மையின் அடையாளங்கள், செயல்களைப்  பார்ப்பதற்கான பல்வேறு வழிகளை கண்டுபிடிக்கின்றோம்.

Comments are closed.