அக்டோபர் 10 : நற்செய்தி வாசகம்

யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32
அக்காலத்தில்
மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: “இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————–
“உரிமை வாழ்வில் நிலைத்திருங்கள்”
பொதுக் காலத்தின் இருபத்து எட்டாம் வாரம் திங்கட்கிழமை
I கலாத்தியர் 4: 22-24, 26-27, 31, 5:1
II லூக்கா 11: 29-32
“உரிமை வாழ்வில் நிலைத்திருங்கள்”
உரிமைவாழ்வைப் பெற்றுக்கொண்ட திருடன்:
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு செய்தித்தாள், பெரிய திருடன் ஒருவன் மனம்மாறி, ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டதை வெளியிட்டிருந்தது. இதில் வியப்பு என்னவெனில், அத்திருடன் தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் ஒரு வங்கியிலிருந்து கொள்ளையடித்திருந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முன்வந்ததுதான்.
“மனம்மாறியது போதாதா? எப்போதோ திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டுமா?” என்று காவல்துறை அதிகாரிகள் அவனிடம் கேட்டதற்கு, “நான் திருடிய பணத்தைத் திருப்பித் தராவிட்டால், ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டதற்கு எந்தவோர் அர்த்தமுமில்லாமல் போய்விடும்” என்று திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தான் அந்தத் திருடன்.
ஒருகாலத்தில் அடிமை நிலையிலிருந்த திருடன், ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டதன் மூலம் உரிமை வாழ்வைப் பெற்றுக்கொண்டான். அதில் நிலைத்தும் நின்றான் அவன். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நாம் உரிமை வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பவுல் அடிமைப் பெண், உரிமைப் பெண் என்று இருவகையான பெண்களைப் பற்றிப் பேசுகின்றார். அடிமைப் பெண்ணாக அவர் குடிப்பிடுவது ஆகார்.
நான் உன் வழிமரபை வானத்து விண்மீன்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலப் பெருகச் செய்வேன் என்று ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமிடம் சொல்லியிருந்தோதும், ஆபிரகாம் அதை நம்பாமல், ஆகாரோடு கூடுகின்றார். இதனால் பிறப்பவன்தான் இஸ்மாயில். இவன் அடிமைப் பெண்ணின் மகனாகக் கருதப்படுகின்றான். பவுல், உரிமைப் பெண் என்று குறிப்பிடுவது சாரா. இவரோடு ஆபிரகாமோடு கூடி வாழ்ந்ததனால் பிறந்தது ஈசாக். இந்த உரிமைப் பெண் விண்ணக எருசலேமிற்குச் சுட்டிக் காட்டப்படுகின்றார்.
தொடர்ந்து பேசுகின்ற பவுல், நம்பிக்கையினாலேயே உரிமைப்பேறு கிடைத்தது. அதனால் அதில் நிலைத்திருக்கச் சொல்கின்றார். நற்செய்தியில் இயேசு தன்னிடம் அடையாளம் கேட்போரிடம் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எந்த அடையாளம் தரப்பட மாட்டாது என்கிறது. அடையாளம் கேட்பதே இயேசுவை நம்பாததன் வெளிப்பாடே. அதனாலேயே இயேசு அவர்களுக்கு அப்படியொரு பதிலைத் தருகின்றார்.
நாம் இயேசுவை நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும். அதில் நிலைத்தும் இருக்கவேண்டும். ஏனெனில், அதுவே நமக்கு நிலைவாழ்வைத் தரும். நாம் இயேசுவில் நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா? அதில் நிலைத்திருக்கின்றோமா? சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
 ஆண்டவர் இயேசு வாழ்வின் ஊற்று. அவர்மீது நம்பிக்கை கொள்ளாதவர் வாழ்வை இழக்கின்றார்.
 அருமடையாளத்தைக் கண்டால்தான் நம்புவேன் என்று சொல்வதற்குப் பெயர் நம்பிக்கையே அல்ல.
 பாவத்திற்கு அடிமையாய் இராமல், மரியாவைப் போன்று ஆண்டவருக்கு அடிமையாய் இருப்போம்.
இறைவாக்கு:
‘நம்பியினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தராயிருக்க இயலாது’ (எபி 11:6) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, உரிமைப்பேற்றினைப் பெற்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.