இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 51:1-ல், “கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.” என கூறப்பட்டுள்ளது.
இரக்கத்தின் தேவன் நம் மீது மனம் இரங்கி நம் பாவங்களை மன்னித்தருள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நம்மைத் துன்புறுத்துவோருக்காக மன்றாடும் மிக உயர்ந்த உள்ளத்தை இறைவன் நமக்குத் தந்தருள வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.” என தந்தையைக் குறித்து நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
தீயோர், நேர்மையற்றோர் ஆகியோர் மனம் திரும்ப வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம் என்பதும் அதற்காக அவர் நீடித்த பொறுமையோடு காத்து இருக்கிறார் என்ற உண்மையை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
கோடையின் இந்த கடும் வெப்பம் தணிந்திட இறைவன் நல்ல மழையைத் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.