அனைவரும் பாதுகாப்பாக இருக்காதவரை, எவருக்குமே பாதுகாப்பு இல்லை

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகின் தலத்திருஅவைகளில் நடைபெறும் முழு இரவு இறைவேண்டல், இரவின் இருளில் நம்பிக்கையின் சுடரை ஏற்றும் என்று தான் எதிர்பார்ப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 10, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

திருஅவையின் நீண்டநேர இரவுகள் (#LongNightoftheChurches) என்ற ஹாஷ்டாக்குடன் இவ்வெள்ளியன்று, திருத்தந்தை, தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள  குறுஞ்செய்தியில், “பல ஐரோப்பிய நாடுகளின் திருஅவைகளில் நடைபெறும் முழு இரவு இறைவேண்டல், சந்திப்பின் நேரமாக இருப்பதாக! அச்சந்திப்பு, இரவின் இருளில் நம்பிக்கையின் பல விளக்குகளை ஏற்றுவதாக!” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

கோவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கு…

மேலும், அமெரிக்க மற்றும், ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்புகளோடு தானும் இணைந்து WTO எனப்படும் உலக வர்த்தக அமைப்பிடம், பெருந்தொற்று தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்குமாறு வழிசெய்யப்படவேண்டும் என்று விண்ணப்பிக்கின்றேன் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 10, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள மேலும் இரு டுவிட்டர் செய்திகளில் கூறியுள்ளார்.

“கோவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும், குறிப்பாக ஆப்ரிக்காவில் வாழ்கின்ற மக்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அழைப்புவிடுக்கும், அமெரிக்க மற்றும், ஆப்ரிக்க நாடுகளின் சமூக உரிமை நீதிபதிகள் கூட்டமைப்புகளோடு எனது குரலையும் இணைக்கின்றேன்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவாகியுள்ளன.

“பாதுகாப்பான மற்றும், பலனளிக்கும் தடுப்பூசிகள் அனைவருக்கும் சமஅளவில் கிடைப்பதற்கு வழியமைப்பது, மக்களின் வாழ்வு மற்றும், வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கு அடிப்படையானது. இதில் ஆப்ரிக்கா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடக் கூடாது. அனைவரும் பாதுகாப்பாக இருக்காதவரை, எவருக்குமே பாதுகாப்பு இல்லை” என்ற சொற்கள் திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில் வெளியாயின.

Comments are closed.