மாதாநாள் மரியேவாழ்க மரியாவின்மன்றாட்டுமாலை

வல்லமையுள்ள அன்னை – மரியா
“ஞானம் – ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது” (சாஞா 7:27) என்கிறது சாலமோனின் ஞான நூல். இங்கே குறிப்பிடப்படும் ஞானத்தை மரியாவோடு ஒப்பிடாடால் அவர் வல்லமையுள்ளவர் என்று சொல்லலாம்.
மரியாவின் மன்றாட்டு மாலையில் பத்தொன்பதாவதாக இடம்பெறும் மன்றாட்டு தான், “வல்லமையுள்ள அன்னையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்” என்பதாகும். மரியா எப்படி வல்லமையுள்ள அன்னையாகத் திகழ்கின்றார் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
அ. அவரது தாழ்ச்சியினாலேயே வந்தது:
இன்றைய காலக்கட்டத்தில் வல்லமை என்பது மற்றவர்மீது அதிகாரம் செலுத்துவது எனப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில் வல்லமை என்பது பணிவிடை புரிவது அல்லது தாழ்ச்சியோடு வாழ்வது.இது குறித்து இயேசு கூறும்போது, “உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்” (மத் 20:27) என்பார்.
மரியா கடவுளின் தாயாக இருந்தும், அவர் தன் உறவினரான எலிசபெத்துக்கு விரைந்து சென்று உதவினார். இவ்வாறு மரியா தாழ்ச்சிக்கு இலக்கணமாக இருந்ததால் கடவுள் அவரை வல்லமையுள்ளவராக உயர்த்தினார்.
ஆ. சாத்தான்மீது வல்லமை:
மரியாவின் வல்லமை அவரது தாழ்ச்சியினாலேயே வந்தது என்று பார்த்தோம். இந்த வல்லமையைக் கொண்டு அவர் சாத்தானின் தலையை நசுக்கினார் (தொநூ 3:15).
ஆம், பாம்பின் கவர்ச்சிகரமான வார்த்தைகளில் மயங்கிய முதற் பெற்றோர் விலக்கிப்பட்ட மரத்தின் கனியை உண்டு பாவம் செய்தனர். அந்தப் பாவத்தினால் வந்த தண்டனையிலிருந்து மரியா தான் சொன்ன ஒரே வார்த்தையினால் இந்த மானிட சமூகத்திற்குத் தன் மகன் வழியாக மீட்பினைக் கொண்டு வந்தார். இவ்வாறு அவர் தன் மகன் வழியாகச் சாத்தானின் தலையைக் காயப்படுத்தும் வல்லமையுள்ளவர் ஆனார்.
அதனால் அவரை வல்லமையுள்ளவர் எனச் சொல்வது மிகவும் பொருத்தமாகும்.
இ. வல்லமைமிக்க மரியாவின் பரிந்துரை:
ஒருமுறை புனித பெனடிக்ட் உரோமை நகர்ப் புனித பிரான்செசிற்குக் காட்சி கொடுத்தபோது, “மரியாவின் பரிந்துரையை நாடு” என்றார்.
மரியாவின் பரிந்துரை மிகவும் வல்லமை. எந்த அளவுக்கு உயர்ந்தது எனில், எனது நேரம் இன்னும் வரவில்லை என்று இயேசு சொன்னபோதும், மரியா பந்தி மேற்பார்வையாளரிடம், அவர் உங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்யுங்கள் என்று சொல்லி கானாவில் இயேசுவின் முதல் வல்ல செயல் நடக்கக் காரணமாக இருந்தார்.
மேலும் மரியா விண்ணக மண்ணக அரசி என்பதால் அவர் தனது மகனிடம் நமக்காகப் பரிந்து பேசும்போது நமது வேண்டுதல் கேட்கப்படும். அந்த வகையிலும் மரியா வல்லமையுள்ளவரே!
புனித அந்தோனியூஸ் இவ்வாறு கூறுவார்: “மரியா நம் சார்பாக இருக்கும் போது நமக்கெதிராக இருப்பவர் யார்?”
எனவே வல்லமையுள்ள அன்னை மரியா நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு அவரைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற்றி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.