வாசகமறையுரை (ஜூன் 08)

பொதுக் காலத்தின் பத்தாம் வாரம்
புதன்கிழமை
I 1 அரசர்கள் 18: 20-39
II மத்தேயு 5: 17-19
இருமனத்தோராய் இராதீர்கள்
ஒரே கடவுளை நம்புகிறேன்:
இரஷ்யாவை லெனின் ஆட்சி செய்துகொண்டிருந்த காலமது. அந்தக் காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்ததால், பலரும் தங்கள் உயிருக்கு அஞ்சி, கிறிஸ்தவ அடையாளத்தை மறைந்து வாழ்ந்து வந்தார்கள்.
இந்நிலையியிலும் ஒரு கிறிஸ்தவர் மிகவும் வெளிப்படையாவே இயேசுவிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த படைவீரர் ஒருவர், அவரிடம், கிறிஸ்துவை மறுதலிக்கச் சொன்னார். அவர் கிறிஸ்துவை மறுதலிக்காமல், தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். உடனே படைவீரர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, “இந்தத் துப்பாக்கியைக் கண்டதும், பலர் தங்களுடைய முடிவை மாற்றியிருக்கின்றார்கள். நீ எப்படி?” என்றார்.
அதற்குக் கிறிஸ்தவர், “பல தெய்வங்களை வழிபடுபவர்கள்தான் துப்பாக்கியைக் கண்டதும் அஞ்சுவார்கள். நான் ஒரே கடவுளை வழிபடுபவன். அதனால் நான் இந்தத் துப்பாக்கியைக் கண்டெல்லாம் அஞ்சமாட்டேன்” என்றார். இதைக் கேட்டுச் சீற்றம் அடைந்த படைவீரன் அந்தக் கிறிஸ்தவரைப் பிடித்துச் சிறையில் தள்ளிப் பலவாறு துன்புறுத்தினான்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் கிறிஸ்தவர் ஒரே கடவுளை நம்பினார். அந்த நம்பிக்கைக்காகத் தன் உயிரையும் தரத் துணிந்தார். இன்றைய இறைவார்த்தை நாம் ஒரே கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும் என்ற சிந்தனைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேல் மக்கள் பாகால் தெய்வத்தை வழிபடுவதா?, அல்லது யாவே இறைவனை வழிபடுவதா? என்ற இரு மனத்தவராக இருந்தார்கள். இந்நிலையில்தான் இறைவாக்கினர் எலியா, மக்களிடம், “எத்தனை நாள் இருமனத்தோராய்த் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டுவிட்டு, ஆண்டவராக கடவுள்தான் உண்மையான கடவுள் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு செயலைக் செய்கின்றார்.
கடவுளுக்கு இருக்கும் அதே ஆற்றல் பாகால் தெய்வத்திற்கும் இருப்பதாகப் பொய்வாக்கினர்கள் பிதற்றிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஆண்டவர்தாம் உண்மையான கடவுள் என்பதை எண்பிக்கும் வகையில் பலிபீடம் அமைத்து, அதில் காளையைத் துண்டு துண்டாக வெட்டி வைத்தபோது, பாகாலிடமிருந்து எந்தவொரு பதிலும் வராத நிலையில் ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி வந்து, அதைச் சுட்டெரிக்கின்றது. இதைக் கண்ட மக்கள் அனைவரும், ஆண்டவரே உண்மையான கடவுள் என்று நம்புகின்றார்கள். இவ்வாறு இறைவாக்கினர் எலியா தனது பெயருக்கேற்றாற்போல் ஆண்டவரே கடவுள் என்பதை உறுதிப் படுத்துகின்றார்.
நற்செய்தியில் இயேசு, திருச்சட்டத்தையும் இறைவாக்கையும் கடைப்பிடித்துக் கற்பிக்கின்றவர் விண்ணரசில் மிகப் பெரியவர் என்கிறார். திருச்சட்டமும் இறைவாக்கும் ஒரே கடவுளை வலியுறுத்துகின்றன. எனவே, ஒருவர் ஒரே கடவுளை நம்பி, அதை மக்களுக்குக் கற்பித்தால், அவர் விண்ணரசில் பெரியவராய் இருப்பார். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
சிந்தனைக்கு:
ஒரே கடவுளை நம்புகிறேன் என்று அறிக்கையிட்டால் மட்டும் போதாது. அவருக்கு நாம் உண்மையாய் இருந்து, அவர் காட்டும் வழியில் நடக்க வேண்டும்.
ஆண்டவருக்கு நிகர் யாருமே இல்லை. இந்த உண்மையை உணர்ந்தவர் வேற்று தெய்வத்திற்குப் பின்னால் செல்வதில்லை.
கடவுளின் வார்த்தையின் படி நடப்பது கடினமானது என்றாலும் அது இயலாது கிடையாது.
இறைவாக்கு:
‘இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலக வெல்வோர் யார்?’ (1 யோவா 5:5) என்பார் யோவான். எனவே, நாம் இயேசுவே இறைமகன் என நம்பி, அவர் காட்டும் பாதையில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.