இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில் தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட புனித பேதுரு, “நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.” என நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி கூறுகிறார்.
நோயுற்று மருத்துவமனைகளில் உள்ள அனைவரையும் குணமாக்க இயேசு ஒருவரால் மட்டுமே முடியும் என்பதை நாம் உணர வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில் தளர்ந்து போன சீடர்களுக்கு இயேசு மூன்றாம் முறையாக காட்சி அளித்து ஊக்கமூட்டுகிறார்.
தனிமையில், மன அழுத்தத்தில், திக்கற்று இருப்போர் மனம் தளர்ந்த வேளைகளில் இறைவன் அவர்களோடு இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இந்தியாவிலும், பிற நாடுகளிலும் சற்று அதிகரிக்கும் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.