டிசம்பர் 6 : நற்செய்தி வாசகம்

இன்று புதுமையானவற்றைக் கண்டோம்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 17-26
ஒரு நாள் இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்திருந்த பரிசேயரும் திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள். பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார்.
அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலோடு சுமந்துகொண்டு வந்து, அவரை உள்ளே கொண்டுபோய் இயேசுமுன் வைக்க வழி தேடினர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை உள்ளே கொண்டு போக அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவ்வழியாய் மக்கள் நடுவில் அவரைக் கட்டிலோடு இயேசுவுக்கு முன் இறக்கினார்கள். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
இதனைக் கேட்ட மறைநூல் அறிஞரும் பரிசேயரும், “கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் மட்டுமன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என்று எண்ணிக்கொண்டனர்.
அவர்களின் எண்ணங்களை உய்த்துணர்ந்த இயேசு அவர்களைப் பார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறதென்ன? ‘உம் பாவங்கள் உமக்கு மன்னிக்கப்பட்டன’ என்பதா, அல்லது ‘எழுந்து நடக்கவும்’ என்பதா, எது எளிது? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன்: நீர் எழுந்து உம்முடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு உமது வீட்டுக்குப் போம்!” என்றார். உடனே அவர் அவர்கள் முன்பாக எழுந்து, தாம் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாறே தமது வீட்டுக்குப் போனார்.
இதைக் கண்ட யாவரும் மெய்ம்மறந்தவராய்க் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அச்சம் நிறைந்தவராய், “இன்று புதுமையானவற்றைக் கண்டோம்!” என்று பேசிக்கொண்டார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
“பாவங்களை மன்னிக்கும் இறைவன்”
நிகழ்வு
நகரில் இருந்த பெரிய பல்பொருள் அங்காடி அது (Super Market). அந்தப் பல்பொருள் அங்காடியில், ஒருநாள் மாலை வேளையில், வாடிக்கையாளர்கள் யாவரும் தாங்கள் விரும்பிய பொருள்களை எடுப்பதும், அவற்றுக்குரிய கட்டணத்தைச் செலுத்திச் செலுத்திவிட்டு, அங்கிருந்து வெளியே செல்வதுமாக இருக்கையில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. உடனே எல்லாரும் சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தார்கள். அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பொருள்கள் கீழே விழுந்து உடைந்து கிடந்தன. அவற்றுக்குப் பக்கத்தில் மூதாட்டி ஒருவர் ஒருவிதமான குற்ற உணர்வோடு நின்றுகொண்டிருந்தார்.
உண்மையில் அந்த மூதாட்டியின் கை தெரியாமல் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பொருள்கள்மீது பட்டுவிட்டதால்தான், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்தக் கண்ணாடிப் பொருள்கள் உடைந்துபோயின. இதனால்தான் அந்த மூதாட்டி, ‘எல்லாம் தன்னால் நடந்தது’ என்று ஒருவிதமான குற்ற உணர்வோடு இருந்தார். இதைக் காட்சியைக் கண்ட பல்பொருள் அங்காடியில் இருந்த பலரும் மூதாட்டியை ஒருமாதிரிப் பார்த்தார்கள். ஒருசிலர் எதுவுமே நடக்காததுபோல் இருந்தனர்.
இந்நேரத்தில் அந்த மூதாட்டியிடம் வந்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு போனார். “அம்மா! நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்! எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்” என்றார். அவர் அப்படிச் சொன்னபோதும்கூட மூதாட்டியால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. “என்னால்தான் உங்கள் கடையில் உள்ள கண்ணாடிப் பொருள்கள் எல்லாம் உடைந்து நாசமாயின. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இவற்றின் மதிப்பு எவ்வளவு என்று சொல்லுங்கள், உடனே நான் இவற்றிற்குரிய தொகையைச் செலுத்துவிடுகின்றேன்” என்றார் மூதாட்டி.
“அம்மா! மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம். உங்கள் தவற்றை நான் ஏற்கெனவே மன்னித்துவிட்டேன். மேலும் இவற்றிற்குரிய தொகையையும் நீங்கள் செலுத்தவேண்டாம். ஏனென்றால் என்னுடைய கடையையும் இங்குள்ள பொருள்களையும் நான் காப்பீடு செய்திருக்கின்றேன்” என்று சாந்தமாகப் பேசினார் கடையின் உரிமையாளர். அவர் இவ்வாறு சொன்னபிறகுதான் மூதாட்டி இயல்பு நிலைக்கு வந்தார்
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மூதாட்டி செய்த தவற்றை, பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் மன்னித்தது போன்று, ஆண்டவராகிய கடவுள் நம்முடைய குற்றங்களை மன்னித்து, நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இன்றைய நற்செய்தி வாசகத்தைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
முடக்குவாதமுற்றவரது நண்பர்களின் நம்பிக்கை
ஆண்டவர் இயேசு இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் நடுவில் பல்வேறு வல்ல செயல்களையும் அருமடையாளங்களையும் செய்து வந்ததால், மக்கள் அவருடைய போதனையைக் கேட்கவும், அவரிடமிருந்து நலம்பெறவும் பெருந்திரளாக வந்தார்கள். இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு வீட்டில் போதித்துக்கொண்டிருக்கையில், அவரிடமிருந்து நலம்பெற முடக்குவாதமுற்ற ஒருவரை ஒருசிலர் கட்டிலில் வைத்துத் தூக்கிக்கொண்டு வருகின்றார்கள்; ஆனால், மக்கள் கூட்டம் இயேசுவை நெருக்கிக் கொண்டிருந்ததால், முடக்குவாதமுற்றவரைக் கட்டிலில் வைத்துத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள், இயேசு இருந்த வீட்டின் கூரையின்மீது திறப்பு உண்டாக்கி முடக்குவாதமுற்றவரைக் கீழே இறக்குகின்றர்கள். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவருக்கு நலமளிக்கின்றார்.
இங்கு இயேசு, முடக்குவாதமுற்றவரை மற்ற மனிதர்களுக்கு நலமளித்து போன்று தொட்டு நலமளிக்கவில்லை. மாறாக, அவர் முடக்குவாதமுற்றவரிடம், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று சொல்லி நலமளிக்கின்றார். இயேசு ஏன் இத்தகைய வார்த்தைகளைச் சொல்லவேண்டும்… இயேசு இத்தகைய வார்த்தைகளைச் சொன்னதால், அங்கிருந்த பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரிடமிருந்து எத்தகைய எதிர்ப்பு அவருக்கு வந்தது என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பாவ மன்னிப்பினால் நலம்
யூதர்கள் நடுவில், ஒருவருக்கு வரும் நோய்நொடிகளுக்கும், அவர் செய்த பாவங்களுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்றொரு நம்பிக்கை இருந்தது. இதை யோபுவின் நண்பர்கள் அவரோடு பேசும் வார்த்தைகளைக் கொண்டும், இயேசுவின் சீடர்கள் அவரோடு பேசும் வார்த்தைகளைக் கொண்டும் (யோவா 9: 2) அறிந்துகொள்ளலாம். மக்களிடம் இத்தகைதொரு நம்பிக்கை இருந்தாலும், பாவங்களை மன்னிக்கத் தனக்கு அதிகாரம் இருந்ததாலும், இயேசு முடக்குவாதமுற்றவரை நோக்கி, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று சொல்லி, அவருக்கு நலமளிக்கின்றார். இயேசு முடக்குவாதமுற்றவரை நோக்கி இவ்வாறு சொல்லி நலமளித்ததால், பரிசேயர்களிடமிருந்தும், அவர்களைச் சார்ந்தவர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் வருகின்றன. ஆனாலும் இயேசு அவர்களிடம், தான் இறைமகன் என்பதால், பாவங்களை மன்னிக்க தனக்கு அதிகாரம் என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றார்.
ஆகையால், நாம் இயேசுவால் நமக்கு நலமளிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு அவரை, முடக்குவாத முற்றவரின் நண்பர்களைப் போன்று நெருங்கிச் செல்ல முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘இவர் வழியாக உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டு’ (திப 13: 38) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் இயேசு நமக்குப் பாவ மன்னிப்பும், அதனால் நலவாழ்வும் தருகின்றார் என்ற நம்பிக்கையோடு அவரை அணுகிச் செல்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.