இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
செபமாலை மாதமான இம்மாதத்தின் 13-ஆம் நாளான இன்று இறைவனின் ஆவி நம்முள்ளே நன்கு செயல்படவும், நாம் பிறரை தீர்ப்பளிக்காமல் அதிகமாக அன்பு செய்யவும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில், “ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார். மன உறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார்.” என திருத்தூதர் பவுல் கூறியதை வாசித்தோம்.
நமது எண்ணங்களும், செயல்களும் என்றும் நல்லவைகளாக இருக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 62:1-ல், “கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே;” என ஆசிரியர் கூறுகிறார்.
இறைவன் நமது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என விசுவாசத்துடனும், பொறுமையுடனும் காத்திருக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இங்கிலாந்து நாட்டின் அரசரும், ஒப்புரவாளரும் , இன்றைய புனிதருமான புனித எட்வர்டை நமது திருச்சபைக்குத் தந்தருளிய நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
நமது வேண்டுதல்களுக்கு செவிமடுத்து நல்ல பருவ மழையைத் தந்து கொண்டிருகின்ற நமது இறைவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.