திருத்தந்தை முதலாம் யோவான் பவுல், அருளாளராக அறிவிப்பு
1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 33 நாள்களுக்கு பின், செப்டம்பர் 28ம் தேதி இறையடி சேர்ந்த திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை, அருளாளராக உயர்த்தும் வழிமுறைகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 13, இப்புதனன்று, இசைவளித்துள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையில், புனிதர்கள் மற்றும் அருளாளர்களை அறிவிக்கும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவரான கர்தினால் மார்செல்லோ செமராரோ அவர்களை, இப்புதனன்று, தன் மறைக்கல்வி உரையை வழங்கச் செல்வதற்கு முன் சந்தித்த திருத்தந்தை, வணக்கத்திற்குரிய இறையடியாரான திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் உட்பட, எட்டு பேரின் புண்ணிய வாழ்வு குறித்த விவரங்களை, ஏற்றுக்கொண்டார்.
1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இத்தாலியின் Forno di Canale (தற்போது, Canale d’Agordo என்றழைக்கப்படும்) என்ற ஊரில் பிறந்து, 1978ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் என்ற பெயருடன் இறையடி சேர்ந்த அல்பீனோ லூச்சியானி (Albino Luciani) அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த ஒரு புதுமையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தற்போது, வணக்கத்துக்குரிய இறையடியாராக போற்றப்படும் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், அருளாளராக அறிவிக்கப்படுவதற்கு இசைவளித்தார்.
அத்துடன், வணக்கத்துக்குரிய இறையடியாரான Maria Berenice Duque Hencker அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்துள்ள புதுமையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அவரும் அருளாளராக அறிவிக்கப்படுவதற்கு இசைவளித்தார்.
மேலும், அர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த மறைமாவட்ட அருள்பணியாளரும் இறை ஊழியருமான Diego Hernández González, மற்றும், இயேசு சபையைச் சேர்ந்த அருள்பணியாளரும் இறை ஊழியருமான Giovanni Antonio Solinas ஆகியோரின் மறைசாட்சிய மரணத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விருவரும் அருளாளர்களாக அறிவிக்கப்படுவதற்கு இசைவளித்தார்.
அத்துடன், மறைமாவட்ட அருள்பணியாளரான Diego Hernández González, பிரான்சிஸ்கன் துரவுசபையைச் சேர்ந்த Giuseppe Spoletini, இயேசுவின் எளிய அருள்சகோதரிகள் சபையை நிறுவிய அருள்சகோதரி Maddalena di Gesù, Leucaவின் அன்னை மரியா புதல்வியர் சபையை உருவாக்கிய அருள்சகோதரி Elisabetta Martinez ஆகிய நான்கு இறையடியார்களின் புண்ணியம் நிறைந்த வாழ்வு சாட்சியங்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள் ஏற்றுக்கொண்டார்.
Comments are closed.