மதங்கள், கல்வியின் வழியாக மனிதரை முன்னேற்ற முடியும்

அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வு கலாச்சாரம் குறித்து, இளையோருக்குக் கற்றுக்கொடுப்பதற்கு, உலகளாவிய நிறுவனங்களோடு உயிரூட்டத்துடன் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தை மதங்கள் கொண்டிருக்கின்றன என்று, திருப்பீட பேராயம் ஒன்று கூறியுள்ளது.

ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம், அனைத்துலக ஆசிரியர்கள் நாளைச் சிறப்பிக்கும்  அக்டோபர் 05, இச்செவ்வாயன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், “மதங்கள் மற்றும் கல்வி: கல்விகுறித்த உலகளாவிய ஒப்பந்தத்தை நோக்கி” என்ற தலைப்பில்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னத்தில், உலகளாவிய மதங்களின் தலைவர்களோடு கூட்டம் ஒன்றை நடத்தியதாக, திருப்பீடத்தின் கத்தோலிக்கக் கல்விப் பேராயம் இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் அமைக்கப்படும் திட்டங்களில், கல்வியும் மனிதரும் மையத்தில் வைக்கப்படவேண்டும் என்பதற்குத் தேவையான அனைத்து அம்சங்களுக்கும் உந்துதல் கொடுக்கும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது எனவும், மதங்கள், கல்வியின் வழியாக மனிதரின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இக்காலத்தில் கல்வி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள்பற்றி, உடன்பிறந்த உணர்வு உரையாடலில் ஈடுபட்டுள்ள பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்குகொண்டனர் என்றுரைக்கும் அவ்வறிக்கை, உலகளாவிய உடன்பிறந்த உணர்வை நோக்கி இந்த உலகைத் திசைதிருப்ப உதவும் புதியதொரு கல்விக் கொள்கைக்கு, உலக மதங்கள் தங்களின் ஆதரவை வழங்கமுடியும் என திருத்தந்தை கூறியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பின்புலத்தில், வத்திக்கானில் முதல் முறையாகக்கூடிய உலக மதங்களின் பிரதிநிதிகள், கல்விகுறித்த விவகாரங்கள் பற்றி கலந்துரையாடி, அரசுகள், தங்களின் திட்டங்களில் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் வழிவகைகளைக் கண்டுணருமாறு விண்ணப்பம் ஒன்றை வெளியிடும் நோக்கத்தைக் கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.