பிறரன்பு அருள்சகோதரிகள் துறவு சபையை சந்தித்த திருத்தந்தை

உலக ஆயர்கள் மாமன்ற நிகழ்வுகள், திருஅவையின் அனைத்து தளங்களிலும் துவங்கியுள்ள இவ்வேளையில், தங்கள் உலகப் பொதுஅவையை நடத்தியிருக்கும் பிறரன்பு அருள்சகோதரிகள் துறவு சபையை வாழ்த்துவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த இத்துறவு சபையின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

புனித Joan Antida Thouret அவர்களின் பிறரன்பு அருள்சகோதரிகள் துறவு சபையைச் சேர்ந்தவர்கள், கோவிட் பெருந்தொற்றின் காரணமாக உருவான பல தடங்கல்களை தாண்டி, தங்கள் 21வது உலகப் பொதுஅவையை வெற்றிகரமாக நிறைவுசெய்து, திருத்தந்தையைச் சந்திக்க, வத்திக்கானுக்கு வருகை தந்ததையொட்டி, திருத்தந்தை அவர்களைப் பாராட்டினார்.

ஆயர்கள் மாமன்றத்தின் ஒருங்கிணைந்த பயணம் ஆரம்பமாகியுள்ள இவ்வேளையில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோர், திருஅவையின் ஒரு முக்கிய அங்கம் என்பதை, பிறரன்பு அருள்சகோதரிகள் துறவு சபையைச் சேர்ந்தவர்கள் இன்னும் ஆழமாக உணரவேண்டும் என்று, திருத்தந்தை இச்சந்திப்பில் குறிப்பிட்டார்.

‘இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றிய’ காலத்தில், அவருக்கு பெரும் துணையாக இருந்த பெண்களைக் குறித்து (காண்க. லூக்கா 8:1-3) இச்சந்திப்பில் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த பெண்கள் குழுவின் ஒரு தொடர்ச்சியாக, பிறரன்பு அருள்சகோதரிகள் துறவு சபையை தான் காண்பதாகக் கூறினார்.

இயேசுவின் பறைசாற்றுதல் பயணத்தில், இத்துறவு சபையின் பங்கு என்னவாக இருக்கவேண்டும் என்ற கேள்வியை தன் உரையில் எழுப்பிய திருத்தந்தை, பெத்தானியாவில் வாழ்ந்த மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளில், இயேசுவின் காலடியில் அமர்ந்து செவிமடுத்த மரியா, இக்கேள்விக்கு விடையாக அமைகிறார் என்று கூறினார்.

இயேசுவின் காலடியில் அமர்ந்திருந்த மரியாவை, இத்துறவு சபையினர், தங்கள் உலக அவைக்கு ஒரு முக்கிய அடையாளமாக கொண்டிருந்ததைக் சுட்டிக்காட்டி பாராட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவுக்குச் செவிமடுக்கும் அதே வேளையில், வறியோரின் குரலுக்கும் இத்துறவு சபையின் உறுப்பினர்கள் செவிமடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இறைவனின் அன்பை இவ்வுலகிற்கு சொல்லித்தர அழைக்கப்பட்டுள்ள இத்துறவு சபையினர், தங்கள் சொற்கள் வழியாக அல்லாமல், செயல்கள் வழியே இந்த அன்பை பறைசாற்ற, புனித Joan Antida அனைவருக்கும் உதவி செய்வாராக என்று கூறி, திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

Comments are closed.