இயேசுவின் திரு இருதய வணக்க மாதம்.

இயேசுவின் திருஇருதயம் தேவ வணக்கத்துக்கும் தேவ பயத்துக்கும் ஆசிரியர்.
இயேசுவின் திருஇருதயப் பக்தியானது தேவ அன்பின் பக்தி, அன்புக்கு தேவபயமும் தேவ வணக்கமும் அடித்தளம். இவற்றிலிருந்து தேவ அன்பைப் பிரிக்கமுடியாது. தன் தாய் தகப்பனை உருக்கமாய் அன்புச் செய்கிற குமாரன் அவர்களுக்குச் சகலத்திலும் கீழ்ப்படிந்து மரியாதை செய்து அவர்களுக்கு யாதொரு வருத்தம் வருவியாமலும் அவர்களுடைய துன்பத்துக்கு காரணமாயிராமலும் நடந்து தன்னாலியன்றவரையில் அவர்களின் விருப்பப்படி நடப்பான். திவ்விய மீட்பர் இவ்வுலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவருடைய திரு இருதயமானது நடந்து கொண்ட விதத்தைக் கவனித்துப் பார். தமது திவ்விய பிதாவின் மட்டில் எவ்வளவு மரியாதை, எம்மாத்திரம் வணக்கம், ஆராதனை காண்பித்துவந்தார்; தமது பிதாவின் மகிமையைத் தேடுவதிலும், அவருடைய திருச்சித்தத்தை நிறைவேற்றுவதிலும், தேவ மகத்துவத்துக்கு எது உகந்ததோ அதை எப்போதும் செய்வதிலும், எவ்வளவு ஞான ஆவல் காண்பித்தார்!
ஆண்டவருக்கு நாம் காண்பிக்கவேண்டிய அன்பைப் பற்றிப் பேசாமல், அவருக்குக் காண்பிக்கவேண்டிய மரியாதை வணக்கத்தைப் பற்றிச் சில கன்னியர் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறதைக் கண்ட புனித மார்கரீத் மரியம்மாள் சேசுவின் திரு இருதயத்தை நோக்கி ஒருநாள் முறையிடுகையில், திவ்விய இரட்சகர் புனிதையை நோக்கி : மகளே, அன்பின் பரிசுத்த பாசத்தால் நீ நமது இருதயத்தை அணுகிவர நாம் உனக்கு ஓர் விசேஷ வரமளிக்கிறோமென்பது உண்மை என்றாலும் நமது அளவற்ற தேவ மீட்பின் மட்டில் மரியாதையும், பயமும், வணக்கமும் இருக்கவேண்டும். ஆதலால் அந்தக் கன்னியர்களுடைய நடபடிக்கை உமக்கு விருப்பமானதுதான் என்று திருவுளம் பற்றினார்.
ஆதலால் தேவ பயமும், மரியாதை, வணக்கமும் நமக்குப் பயனும் தேவையுமானது. ஏனென்றால் ஒரு பக்கத்தில் பாவியானவன் எதிர்பார்க்கிற தீர்வை, நரகம் இவைகளின் பயமும், வேறோர் பக்கத்தில் அளவற்ற மகத்துவமான இரக்கம் நிறைந்த நமது அன்புக்குரிய ஆண்டவர் பேரில் நமக்குள்ள மரியாதை வணக்கமும், பாவத்தைப் பகைத்து வெறுக்க உதவுகிறதென்பதற்குச் சந்தேகமில்லை. இந்தத் தேவ பயமானது நாம் உறுதிபூசுதல் பெறும்போது நாம் அடைகிற பரிசுத்த ஆவியின் ஏழுவரங்களில் ஒன்று. இது நம்முடைய புனிதப்படுத்தலுக்கு அடித்தளமாயிருக்கிறது. மெய்யாகவே தேவபயமானது பாவத்திலிருந்து நம்மை விலக்குகிறதுமல்லாமல், நாம் தேவ அருளை அடையவும், கிறிஸ்தவனுக்குரிய புண்ணியங்களை அனுசரித்து நமது ஆண்டவருக்கு மாறாத அன்போடு ஊழியம் செய்யவும் நமது ஆத்துமத்தை ஆயத்தப்படுத்துகிறது. ஆனதுபற்றியே பரிசுத்த ஆவியானவர் ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர் திருப்பாடல்கள் 112 : 1 என்று திருவுளம்பற்றுகிறார்.
தேவபயத்தில் இரண்டுவிதமுண்டு. ஒன்று தீமையும் கெடுதலுமானது. மற்றொன்று பிரயோஜனமும் அடிமைகளுக்கு உரியது. அவர்களுடைய மனது துர்மார்க்கத்தில் மூழ்கியிருக்கிறது. என்றாலும் அடிமைகளைப்போல் கடூர தண்டனைக்குப் பயந்து குற்றம் செய்யாமலிருக்க முயற்சிப்பார்கள். இதேவிதமாய் சில கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். தேவ நீதியின் கோபாக்கினை தங்கள் மேல் விழுந்து தங்களை எங்கே நரகபாதாளத்திலே தள்ளிவிடுமோவென்று பயந்து பாவத்தைத் தவிர்ப்பார்கள். ஆனால் தண்டனைக்குப் பயந்து பாவத்தை விலக்குவார்கள், ஆனால் பாவத்தின் மேல் பற்றுதல் வைத்திருப்பார்கள். தங்களுடைய நடத்தை கடவுளுக்கு சிறிதளவும் பொருந்தாதென்று அவர்கள் அறிந்திருந்தாலும், ஆசாபாசங்களுக்கும், சாவான பாவங்களுக்கும், தங்கள் வாழ்வைக் கையளிக்க விரும்புவார்கள். இவ்வித அச்சத்தில் தேவ அன்பு என்பது கடுகளவுமில்லாததால் இது தீமையானதுதான்.
நன்மையும் பயனுள்ள தேவபயத்தில் அடிமைகளின் பயம், பிள்ளைகளின் பயம் ஆகிய இரண்டு படிகளுண்டு. அடிமைகளின் பயத்தைக் கொண்டிருக்கிற ஆத்துமமானது பாவத்தைப் பகைத்து அருவருத்துத் தள்ளுகிறது. ஏனெனில் பாவமானது தன்னை மோட்ச சம்பாவனையிலிருந்து விலக்கி முடிவில்லா நரகாக்கினைக்குத் தன்னை ஆளாக்கிவிடுமென்று ஆத்துமம் உணர்ந்திருக்கிறது. இந்தப் பயத்தை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கும் மனஸ்தாபம் அடிமை மனஸ்தாபம் எனப்படும். இந்த மனஸ்தாபம் பாவ கேடுகளை நீக்கவேண்டுமானால் குருவானவரிடமிருந்து ஒப்பரவு ஆசீர்வாதம் பெறுவது அவசியம். ஆனால் பிள்ளைகளின் பயமும் நாம் பாவத்தைப் பகைத்து அருவருக்கச் செய்கிறது. இவ்வித அருவருப்புக்குக் காரணம் நரகாக்கினையல்ல; மட்டில்லாத அன்புக்கு தகுதியான சேசுவின் திரு இருதயத்துக்குப் பாவமானது துக்கம் வருவிக்கிறதே என்கிற நினைவே இதற்குக் காரணம். தகப்பன் தன்னைத் தண்டிக்கமாட்டாரென்று அறிந்திருந்தாலும், அவருக்குச் சற்றேனும் வருத்தம் வருவிக்கக்கூடிய எதையும் வெகு கவனமாய் விலக்குகிற அன்புள்ள பிள்ளையின் பயம் இதுவே. இந்த நல்ல பிள்ளைக்கு வரக்கூடிய பெரிய கவலை, துன்பம் ஏதென்றால், தன் அன்பார்ந்த நல்ல தகப்பனுடைய இருதயத்துக்கு வருத்தம் வருவித்தேனே என்னும் நினைவுதான்.
சேசுக்கிறிஸ்துவின் உண்மையான அன்புள்ள உத்தம கிறிஸ்தவர்கள் தாழ்ச்சி வணக்கத்தோடு தேவ சந்நிதியில் வாழ்கிறார்கள். தாங்கள் செபம் பண்ணும்போது மகாத்துமாவாகிய ஆபிரகாம் என்பவரின் மாதிரியாக நான் சாம்பலும் தூசியுமாயிருந்தாலும் நான் என் ஆண்டவரோடு பேசுவேன் என்று வணக்கத்தோடும் நம்பிக்கையோடும் வேண்டிக்கொள்வார்கள். நல்ல கிறிஸ்தவர்கள் மற்ற மனிதர்கள் மட்டிலும் விசேஷமாய் சேசுவின் பிரதிநிதிகளாகவும் அவருடைய தெய்வீக அதிகாரத்திற்கு பங்காளிகளாகவும் விளங்குகிற குருக்கள் ஆயர்கள் மட்டிலும் சங்கை வணக்கம் புரிவார்கள். இவ்வித உத்தம பற்றுதல்களோடு வாழும்படி இந்தக் கிறிஸ்தவர்களைத் தூண்டுவது அவர்களிடத்திலுள்ள உயிருள்ள விசுவாசமேயாகும்.
தேவ பயமில்லாத கிறிஸ்தவர்களுடைய வாழ்வு இதற்கு நேர்மாறானது! தேவ ஊழியத்தில் எவ்வளவு கவனமின்மை , ஞானக் காரியங்களை நிறைவேற்றுவதில் எவ்வளவு தாமதம்! கடவுளுக்கு மிக்க துன்பம் வருவிக்கக்கூடிய சிந்தனை, வாக்கு செயல்கள் எத்தனை? தங்கள் சுபாவ தீய நாட்டங்களுக்கு எவ்வளவு சுலபமாய் இணங்குகிறார்கள்! தனியாகவும், மற்றவர்களோடு சேர்ந்தும் கட்டிக் கொள்ளுகிற பாவாக்கிரமங்கள் எத்தனை? இந்த அக்கிரம் பாவங்களைத் தவத்தால் பரிகாரம் செய்கிறார்களா? தாங்கள் நினையாமுன்னே தானே தங்கள் ஆண்டவருக்கு தாங்கள் கொடுக்கவேண்டிய கண்டிப்பான கணக்கைப்பற்றிச் சிறிதும் கவனிக்கிறார்களா? இவ்விதமாய் வாழ்கிறவர்களைப் பற்றி பரிசுத்த ஆவியானவர் ஞானமுள்ளவர் விழிப்புடையவர்; தீமையை விட்டு விலகுவர். மதிகேட்ரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வர் நீதிமொழிகள் 14 : 16) என்று திருவுளம் பற்றுகிறார்.
பெரிய அப்போஸ்தலரான புனித சின்னப்பர் பரலோகத்தின் உன்னத பதவியில் சேர்ந்திருந்தாலும் தன் பழைய பாவங்களைப் பரிகரிக்க மிகக் கடினதபசு செய்துவந்தார். கொரிந்தியருக்கு அவர் எழுதின் முதல் நிருபத்தில் பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன் (1கொரிந்தியர் 9: 27 என்கிறார்
ஆமென்
இயேசுவின் திருஇருதய நவநாள்.
கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்று திருவுளம் பற்றியிருக்கிற திவ்விய சேசுவே, தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி ஆராதனைக்குரிய உமது திருநாளில் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக்கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக்கொள்ளும் மன்றாட்டு ஏதென்றால்…
(வேண்டியதை உறுதியோடு கேட்கவும்)
சகல நன்மைகளுக்கும், பேறுபலன்களுக்கும் வற்றாத ஊரணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப்போகிறேன். தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப்போகிறேன். தாமே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திருஇருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே நான் தட்டிக் கேட்கப்போகிறேன். ஆகையால் என் நேச சேசுவின் திருஇருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஒடிவந்தேன். இக்கட்டு இடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவிரென்று நம்பியிருக்கிறேன்.
தேவரீர் சித்தம் வைத்தாலே போதும். என் செபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே, தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுவதும் அபாத்திரவான் தான், ஆகிலும் நான் இதனாலே அதைரியப்பட்டு பின்னடைந்து போவேனல்ல; தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தை தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் எங்களை நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கு இரங்காமற் போகாது.
இரக்கமுள்ள திருஇருதயமே! என் விண்ணப்பத்தின்மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே! தேவரீரை நான் வாழ்த்தி வணங்கி போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே! ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதய தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியை கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன்

Comments are closed.