இயேசுவின் தூய்மைமிகு திரு உடல், திரு இரத்தப் பெருவிழா – ஜூன் 06

“கிறிஸ்துவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமான நற்கருணை”
நிகழ்வு
இங்கிலாந்தைச் சார்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் மால்கம் மக்கரிட்ஜ். நாத்திகரான இவருக்கு ஒருநாள் ஒரு வினோதமான ஆசை வந்தது. கொல்கொத்தா நகர் அன்னைத் தெரசாவின் ஒருநாள் வாழ்வைப் படம்பிடித்து, அதைக் குரும்படமாக வெளியிடுவதே அந்த ஆசை. இது குறித்து இவர் தெரசாவிடம் கேட்டதற்கு, அவர் முழுமனச் சம்மதம் தெரிவித்தார்.
இதற்குப் பின் ஒருநாள் காலையில் மால்கம் மக்கரிட்ஜ் புகைப்படக் கருவிகளுடன் தெரசா இறைவழிபாடு செய்யும் கோயிலுக்கு முன்பு நின்றிருந்தார். தெரசா கோயிலுக்குள் நுழைந்ததும், பளீர் வெளிச்சத்துடன் அவரைப் புகைப்படம் எடுத்தார். இத்தகைய வெளிச்சம் தான் வழிபாடு செய்வதற்கு இடையூறாக இருப்பதை உணர்ந்த தெரசா இவரிடம், “வழிபாடு செய்வதற்குப் பளீர் வெளிச்சம் தடையாக இருக்கின்றது. அதைக் குறைத்துக் கொள்ளலாமா?” என்று சொல்ல, இவர், “வெளிச்சத்தைக் குறைத்துக் கொண்டால், உங்களுடைய முகம் தெளிவாகத் தெரியாதே!” என்றார். உடனே தெரசா, “என்னுடைய முகம் தெளிவாகத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பளீர் வெளிச்சம் நான் வழிபாடு செய்வதற்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.
பின்னர் இவர் தெரசா காலைவழிபாடு செய்வதையும் திருப்பலியில் கலந்து கொள்வதையும், தியானம் செய்வதையும் குறைந்த வெளிச்சத்தில் தன் புகைப்படக் கருவியில் பதிவு செய்தார். தெரசா காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு, மற்ற பணிகளை மேற்கொள்ளும்பொழுது இவர் பளீர் வெளிச்சத்தில் எல்லாவற்றையும் படம்பிடித்து முடித்தார். மாலை வேளையில் தான் பிடித்த புகைப்படங்கள் எப்படி வந்திருக்கின்றன என்று இவர் பார்த்தபொழுது இவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், குறைந்த வெளிச்சத்தில் இவர் தெரசாவைப் புகைப்படம் எடுத்தவற்றிலெல்லாம் அவரது முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. இது தொடர்பாக இவர் தெரசாவிடம் கேட்டபொழுது அவர், “நான் நாள்தோறும் மாத்திரைகள் சாப்பிடுகிறேன், அதனால்தான் என் முகம் குறைந்த வெளிச்சத்திலும் பிரகாசமாக இருக்கினறது?” என்றார். “என்ன நீங்கள் மாத்திரைகள் சாப்பிடுகிறீர்களா? அந்த மாத்திரைகள் எங்கு கிடைக்கும்?” என்று இவர் தெரசாவிடம் கேட்டபொழுது தெரசா, நற்கருணைப் பேழையைச் சுட்டிக்காட்டினார். அப்பொழுதுதான் இவருக்கு உண்மை புரிந்தது. இதன்பிறகு இவர் கத்தோலிக்கராக மாறினார்.
ஆம், இறைப்பணியையும் மக்கள் பணியையும் ஒரு சேரச் செய்துவந்த கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா அந்தப் பணிகளுக்கான ஆற்றலை கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமான நற்கருணையிலிருந்தே பெற்றார். இன்று நாம் இயேசுவின் தூய்மைமிகு திரு உடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழாவும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியைக் கூறுகின்றன என்று சிந்திப்போம்.
நற்கருணை: புதிய உடன்படிக்கையின் அடையாளம்
“நற்கருணை என்பது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து திருஅவை பெற்றுள்ள பல சிறப்பான கொடைகளில் ஒன்று மட்டுமல்ல; அது ஓர் ஈடு இணையற்ற கொடையாகும். ஏனெனில், அது அவரையே அளிக்கின்ற கொடையாகும்” என்பார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால்.
இன்று நாம் கொண்டாடுகின்ற இயேசுவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழாவானது 1246 ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் அர்பனால் திருஅவை முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது. அதன்படி இப்பெருவிழா அன்றுமுதல் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றது. திரெந்து திருச்சங்கம், “நற்கருணையில் உள்ள ஆண்டவர் இயேசுவுக்கு நாம் ஆராதனை செலுத்துவேண்டும். அவ்வாறு நாம் செலுத்தும் ஆராதனை மற்றவரையும் நற்கருணை ஆண்டவர்பால் ஈர்க்கவேண்டும்” என்கிறது. இவ்வாறு நாம் நற்கருணையில் உள்ள ஆண்டவருக்குச் செலுத்தும் ஆராதனை பலரையும் அவர்பால் ஈர்க்கவேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகின்ற இயேசுவின் தூய்மைமிகு திரு உடல், திரு இரத்தப் பெருவிழா நமக்குத் தரும் முதன்மையான செய்தி, நற்கருணை புதிய உடன்படிக்கையின் அடையாளம் என்பதாகும்.
பழைய ஏற்பட்டுக் காலத்தில் இரத்தம் உடன்படிக்கையின் அடையாளமாகக் கருதப்பட்டது. இதற்குச் சான்றாக இருப்பது இன்றைய முதல்வாசகம். முதல்வாசகத்தில், மோசே வெள்ளாட்டுக் கிடாயின் இரத்தத்தை எடுத்து, மக்கள் மேல் தெளித்து, “ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம்” என்கிறார்; ஆனால், நற்செய்தியில் இயேசு, கிண்ணத்தைக் கையிலெடுத்து, “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்” என்கிறார். இது குறித்து எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறும்பொழுது, “அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தமல்ல, அவரது சொந்த இரத்தமே!” என்பார். ஆகையால், இயேசுவின் திரு உடலும் திருஇரத்தமுமான நற்கருணை புதிய உடன்படிக்கையின் அடையாளம் என்று சொல்லலாம்.
நற்கருணை: ஒற்றுமையின் அடையாளம்
நற்கருணையைக் குறித்துக் கூறும்பொழுது சலேசு நகர்ப் புனித பிரான்சிஸ் இவ்வாறு கூறுவார்: “நற்கருணை அன்பின் அருளடையாளம்; நற்செயல்களின் உறைவிடம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒற்றுமையின் அடையாளம்.” நற்கருணை எப்படி ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்றது என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நற்கருணை என்பது அடிப்படையில் இயேசுவின் திரு உடல் மற்றும் திரு இரத்தம். இத்திருவுடலின் உறுப்புகளாக நாம் ஒவ்வொருவரும் இருக்கின்றோம். இதையே புனித பவுல், “உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல் கிறிஸ்துவும் இருக்கின்றார்” (1 கொரி 12: 12) என்பார். அப்படியெனில், கிறிஸ்துவின் உறுப்புகளாய் இருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் இருக்கின்ற ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், படித்தவன் படிக்காதவன் என்ற வேறுபாடுகளின்றி கிறிஸ்துவில் ஒன்றாய் இருக்க வேண்டும் (கலா 3: 28).
நற்கருணை: மறுகிறிஸ்துவாக வாழ்வதற்கு விடுக்கும் அழைப்பு
நற்கருணை புதிய உடன்படிக்கையின் அடையாளம், ஒற்றுமையின் அடையாளம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், நிறைவாக நற்கருணை நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன என்று சிந்திப்போம்.
1916 ஆம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் உள்ள பாத்திமா நகரில் புனித கன்னி மரியா மூன்று சிறுவர்களுக்குக் காட்சியளித்தார். அம்மூவர்களில் ஒருவர்தான் புனித ஜெசிந்தா. இவர் நற்கருனையைக் குறித்துச் சொல்லக்கூடிய ஒரு செய்தி மிகவும் கவனத்திற்கு உரியது. இவர் சொல்லும் செய்தி இதுதான்: “நற்கருணை வழியாக இயேசு கிறிஸ்துவை இதயத்தில் சுமந்து செல்வோம்.” ஆம், ஒவ்வொரு நாளும் நற்கருணையை உள்கொள்ளும் நாம், இயேசுவை இதயத்தில் சுமந்து, மறு கிறிஸ்துவாக வாழவேண்டும். இவ்வாறு நாம் மறு கிறிஸ்து கிறிஸ்துவாக வாழ்கின்றபொழுது, மற்றவர்கள் நம்மைப் பார்த்துவிட்டு இவரல்லவா கிறிஸ்தவர், இவளல்லவா கிறிஸ்தவள் என்று விண்ணகத்தில் உள்ள தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5: 16). எனவே, நாம் புனித உடன்படிக்கையின் அடையாளமாக, ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும் நற்கருணையைத் தகுதியான உள்ளத்தோடு உள்கொண்டு, மறு கிறிஸ்துவாக வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை:
‘’நமது கண்கள் எப்போதும் நற்கருணை ஆண்டவரையே நோக்கியிருக்க வேண்டும். நற்கருணையில் உள்ள கிறிஸ்துவின் உடனிருப்புதான் நம் வாழ்வை வளமாக்கும்’ என்பார் புனித பெர்னார்ந்து. எனவே, நாம் நற்கருணை ஆண்டவரை உற்றுநோக்கி, நற்கருணை ஆண்டவர் உணர்த்தும் தியாகம், ஒன்றிப்பு, பேரன்பு ஆகியவற்றை நமதாக்கி இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.