மார்ச் 30 : நற்செய்தி வாசகம்
உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்… நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38
அக்காலத்தில்
தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.
இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, “யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக் கேள்” என்றார். இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்த அவர், “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்” எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.
இயேசு அவனிடம், “நீ செய்ய இருப்பதை விரைவில் செய்” என்றார். இயேசு ஏன் அவனிடம் இப்படிக் கூறினார் என்பதைப் பந்தியில் அமர்ந்திருந்தோர் யாரும் புரிந்துகொள்ளவில்லை. பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக்கொண்டனர். யூதாசு அப்பத் துண்டைப் பெற்றுக் கொண்டவுடன் வெளியே போனான். அது இரவு நேரம்.
அவன் வெளியே போனபின் இயேசு, “இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார். கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்” என்றார்.
சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் போகுமிடத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வர இப்போது உன்னால் இயலாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “ஆண்டவரே ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “எனக்காக உயிரையும் கொடுப்பாயோ? நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
புனித வாரம் செவ்வாய்க்கிழமை
I எசாயா 49: 1-6
II யோவான் 13: 21-33, 36-38
“உன் வழியாய் மாட்சியுறுவேன்”
பேருந்தில் இருக்கை கொடுக்கும் கிறிஸ்தவ இளைஞன்
பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இன்னும் ஒருசில ஆண்டுகளே இருந்த திரவியம் எப்பொழுதும் தன்னிடமிருந்த நான்குசக்கர வண்டியில்தான் அலுவலகத்திற்குச் சென்று வருவார். ஒருநாள் அவரது வண்டி பழுதடைந்திருந்ததால், அவர் பேருந்தில் அலுவலகத்திற்குச் சென்று, பேருந்திலேயே வீட்டிற்குத் திரும்பிவந்துகொண்டிருந்தார். அன்றைய நாளில் பேருந்தில் கூட்டம் மிகுதியாக இருந்தது. அதனால் அவர் நின்றுகொண்டேதான் வந்தார். ஒவ்வொரு நிறுத்தமாக வந்ததும், பேருந்தில் இருந்தவர்கள் கீழே இறங்குவதும், புதியவர்கள் ஏறுவதுமாக இருந்தார்கள். ஒரு நிறுத்தத்தில் பேருந்தில் ஓர் இருக்கை காலியானது; ஆனால், அந்த இருக்கைக்குப் பக்கத்தில் இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்ததால், அவன் அமர்ந்துகொள்ளட்டும் என்று இவர் விட்டுவிட்டார். அவனோ பெருந்தன்மையாக, “நீங்களே இந்த இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்!” என்று இவர் அமரக் கொடுத்தான்.
இதற்குப் பிறகு பேருந்து நகர்ந்து, அடுத்த நிறுத்தத்தில்போய் நின்றது. அங்கு ஓர் இருக்கை காலியானது, அதை ஒரு மூதாட்டிக்கு இவன் விட்டுக்கொடுத்தான். அதற்கடுத்த நிறுத்ததிலும் ஓர் இருக்காய் காலியானது. அதில் அவன் உட்கார்ந்திருக்கலாம் என்றாலும் பெண்மணி ஒருவருக்கு விட்டுக்கொடுத்தான். இப்படியே அவன் தனக்குக்கிடைத்த இருக்கைகளை மற்றவருக்குக் கொடுத்துவிட்டு நின்றுகொண்டே வருவதைப் பார்த்த இவர் அவனிடம், “உன்னைப் பார்ப்பதற்கு மிகவும் களைப்பாக இருப்பதுபோல் இருக்கின்றது. பிறகு ஏன் நீ உனக்குக்கிடைக்கும் இருக்கையை மற்றவர் அமரக்கொடுத்துவிட்டு நின்றுகொண்டிருக்கின்றாய்?” என்றார். அதற்கு அவன், “ஐயா! நான் ஒரு கிறிஸ்தவன்! மற்றவருக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என நினைக்கும் எனக்குக் கையில் எதுவும் இல்லை. அதனால்தான் எனக்குக் கிடைக்கும் இருக்கைகளை முடியாதவர்களுக்குக் கொடுத்து, நான் வழிபடும் கிறிஸ்துவை மாட்சிப்படுத்துகின்றேன்” என்றான்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் இளைஞன் தான் செய்த இரக்கச் செயலின் வழியாகக் கடவுளை மாட்சிப்படுத்தினான். இன்றைய இறைவார்த்தை இயேசு கிறிஸ்து தந்தை மாட்சிப்படுத்துவதைப் பற்றிக் கூறுகின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், துன்புறும் ஊழியனைப் பற்றி வரும் நான்கு பாடல்களில் இரண்டாவது பாடலாகும். இப்பாடலில் ஆண்டவர் கடவுள், மெசியாவை முன்னிட்டு, “நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்” என்கின்றார். இங்கு ஆண்டவர் சொல்கின்ற இந்த வார்த்தைகளுக்கு ஏற்றாற்போல் இயேசு கிறிஸ்து, பன்னிரு சீடர்களுள் ஒருவரான யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டு, மாட்சியுறுகின்றார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சியுறுகின்றார். நாம் நமது செயல்களால் இயேசுவைப் போன்று கடவுளை மாட்சிப்படுத்துகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
நமது நற்செயல்களால் கடவுளை மாட்சிப்படுத்துவோம் (மத் 5: 16)
கடவுளை மாட்சிப்படுத்த பலவழிகள் இருந்தாலும், அவரது திருவுளத்தின்படி நடப்பதே, அவரை மாட்சிப்படுத்த சிறந்த வழி
தம்மை மாட்சிப்படுத்துவோரைக் கடவுள் மாட்சிப்படுத்துவார்
இறைவார்த்தை:
‘எல்லா விதத்திலும் கடவுளை மாட்சிப்படுத்துங்கள்’ (1 கொரி 10: 22). என்பார் புனித பவுல். எனவே, நாம் எல்லா விதத்திலும் கடவுளை மாட்சிப்படுத்தி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.