வாசக மறையுரை (மார்ச் 30)
புனித வாரம்
செவ்வாய்க்கிழமை
I எசாயா 49: 1-6
II யோவான் 13: 21-33, 36-38
“உன் வழியாய் மாட்சியுறுவேன்”
பேருந்தில் இருக்கை கொடுக்கும் கிறிஸ்தவ இளைஞன்:
பணியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இன்னும் ஒருசில ஆண்டுகளே இருந்த திரவியம் எப்பொழுதும் தன்னிடமிருந்த நான்கு சக்கர வண்டியில்தான் அலுவலகத்திற்குச் சென்று வருவார். ஒருநாள் அவரது வண்டி பழுதடைந்திருந்ததால், அவர் பேருந்தில் அலுவலகத்திற்குச் சென்று, பேருந்திலேயே வீட்டிற்குத் திரும்பிவந்துகொண்டிருந்தார். அன்றைய நாளில் பேருந்தில் கூட்டம் மிகுதியாக இருந்தது. அதனால் அவர் நின்றுகொண்டேதான் வந்தார். ஒவ்வொரு நிறுத்தமாக வந்ததும், பேருந்தில் இருந்தவர்கள் கீழே இறங்குவதும், புதியவர்கள் ஏறுவதுமாக இருந்தார்கள். ஒரு நிறுத்தத்தில் பேருந்தில் ஓர் இருக்கை காலியானது; ஆனால், அந்த இருக்கைக்குப் பக்கத்தில் இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்ததால், அவன் அமர்ந்துகொள்ளட்டும் என்று இவர் விட்டுவிட்டார். அவனோ பெருந்தன்மையாக, “நீங்களே இந்த இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள்!” என்று இவர் அமரக் கொடுத்தான்.
இதற்குப் பிறகு பேருந்து நகர்ந்து, அடுத்த நிறுத்தத்தில்போய் நின்றது. அங்கு ஓர் இருக்கை காலியானது, அதை ஒரு மூதாட்டிக்கு இவன் விட்டுக்கொடுத்தான். அதற்கடுத்த நிறுத்ததிலும் ஓர் இருக்கை காலியானது. அதில் அவன் உட்கார்ந்திருக்கலாம் என்றாலும் பெண்மணி ஒருவருக்கு விட்டுக்கொடுத்தான். இப்படியே அவன் தனக்குக்கிடைத்த இருக்கைகளை மற்றவருக்குக் கொடுத்துவிட்டு நின்றுகொண்டே வருவதைப் பார்த்த இவர் அவனிடம், “உன்னைப் பார்ப்பதற்கு மிகவும் களைப்பாக இருப்பதுபோல் இருக்கின்றது. பிறகு ஏன் நீ உனக்குக் கிடைக்கும் இருக்கையை மற்றவர் அமரக்கொடுத்துவிட்டு நின்றுகொண்டிருக்கின்றாய்?” என்றார். அதற்கு அவன், “ஐயா! நான் ஒரு கிறிஸ்தவன்! மற்றவருக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என நினைக்கும் எனக்குக் கையில் எதுவும் இல்லை. அதனால்தான் எனக்குக் கிடைக்கும் இருக்கைகளை முடியாதவர்களுக்குக் கொடுத்து, நான் வழிபடும் கிறிஸ்துவை மாட்சிப்படுத்துகின்றேன்” என்றான்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் இளைஞன் தான் செய்த இரக்கச் செயலின் வழியாகக் கடவுளை மாட்சிப்படுத்தினான். இன்றைய இறைவார்த்தை இயேசு கிறிஸ்து தந்தையை மாட்சிப்படுத்துவதைப் பற்றிக் கூறுகின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம், துன்புறும் ஊழியனைப் பற்றி வரும் நான்கு பாடல்களில் இரண்டாவது பாடலாகும். இப்பாடலில் ஆண்டவராகிய கடவுள், மெசியாவை முன்னிட்டு, “நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்” என்கின்றார். இங்கு ஆண்டவர் சொல்கின்ற இந்த வார்த்தைகளுக்கு ஏற்றாற்போல் இயேசு கிறிஸ்து, பன்னிரு சீடர்களுள் ஒருவரான யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டு, மாட்சியுறுகின்றார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சியுறுகின்றார். நாம் நமது செயல்களால் இயேசுவைப் போன்று கடவுளை மாட்சிப்படுத்துகின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
நமது நற்செயல்களால் கடவுளை மாட்சிப்படுத்துவோம் (மத் 5: 16)
கடவுளை மாட்சிப்படுத்த பலவழிகள் இருந்தாலும், அவரது திருவுளத்தின்படி நடப்பதே, அவரை மாட்சிப்படுத்த சிறந்த வழி
தம்மை மாட்சிப்படுத்துவோரைக் கடவுள் மாட்சிப்படுத்துவார்
இறைவார்த்தை:
‘எல்லா விதத்திலும் கடவுளை மாட்சிப்படுத்துங்கள்’ (1 கொரி 10: 22). என்பார் புனித பவுல். எனவே, நாம் எல்லா விதத்திலும் கடவுளை மாட்சிப்படுத்தி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.