நோன்பு இருப்பவர்கள், வறியோரோடு வறியோராய்

வெள்ளியன்று, தவக்காலம்  (#Lent)  என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில், உண்ணாநோன்பு இருப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றிய தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.

“நோன்பு இருப்பவர்கள், வறியோரோடு வறியோராய் தங்களை ஆக்கிக்கொள்கின்றனர், அதோடு, தாங்கள் பெற்ற, மற்றும், பகிர்ந்துகொண்ட, அன்பின் கருவூலத்தைச் சேமித்துக்கொள்கின்றனர், எனவே, இத்தகையப் புரிதலோடு மேற்கொள்ளப்படும் நோன்பு, கடவுளையும், நம் அயலவரையும் அன்புகூர உதவுகின்றது. ஏனெனில், அன்பு, மற்றவர் மீது நம் கவனத்தைத் திருப்புகிறது, மற்றும், அவர்களை, நம்மில் ஒருவராகக் கருதவைக்கின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

தவக்கால மறையுரை

மேலும், மார்ச் 26, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட, திருப்பீட தலைமையக அதிகாரிகளுக்கு, “நாசரேத்து இயேசு: ஒரு மனிதர்” என்ற தலைப்பில், கர்தினால் Raniero Cantalamessa அவர்கள், தவக்காலச் சிந்தனைகளை வழங்கினார்.

கடந்த பிப்ரவரி 17ம் தேதி தொடங்கிய தவக்காலத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திருப்பீடத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தவக்கால மறையுரைகளை வழங்கிவரும் கர்தினால் Cantalamessa அவர்கள், இவ்வெள்ளி காலையில் ஆற்றிய மறையுரையில், கடவுளும், மனிதருமாகிய கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிப்பது எது என்ற கேள்வியை முன்வைத்தார்.

நம்மை சுற்றியுள்ள உலகம், மனிதர் தன் சொந்த ஆயுதங்களால் அதிகாரத்தைக் கைப்பற்றி, நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் உலகம், ஓராண்டுக்குள் மனித சமுதாயத்தை தன் காலடியில் போட்டுள்ள கொரோனா என்ற ஒரு சிறு கிருமி பரவியுள்ள உலகம், ஆகிய மூன்றையும் நம்பிக்கையின் கண்களோடு நோக்கிப் பார்க்குமாறு, கர்தினால் Cantalamessa அவர்கள் கூறியுள்ளார்.

இன்னும் ஒரு வாரத்தில் புனித வெள்ளியும், அதற்குப்பின் உயிர்ப்பு ஞாயிறும் வரவிருக்கின்றன, இறந்தோரினின்று உயிர்த்தெழுந்ததன் வாயிலாக, இயேசு, இலாசர் போன்று, மீண்டும், தனது முந்தைய வாழ்வுக்குத் திரும்பவில்லை, மாறாக, எவ்விதத் துன்பமும் இல்லாத, சிறந்த விடுதலை வாழ்வுக்குச் சென்றார், நமக்கும் அதேபோல் நடைபெறும் என நம்புவோம் என்று, கர்தினால் Cantalamessa அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து கூறிவருவதைப் போன்று, இந்த உலகம், பெருந்தொற்றின் கல்லறையினின்று உயிர்த்தெழும்போது, அது, முந்தைய நிலையைவிட, சிறந்ததோர் நிலைக்கு வரும் என்று நம்புவோம் என்று கூறி, தன் தவக்கால மறையுரையை நிறைவுசெய்தார், கர்தினால் Cantalamessa.

Comments are closed.