சனவரி 8 : நற்செய்தி வாசகம்

தொழுநோய் அவரை விட்டு நீங்கிற்று.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 12-16

அக்காலத்தில்

இயேசு ஓர் ஊரில் இருந்தபோது, உடலெல்லாம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் வந்தார். அவர் இயேசுவைக் கண்டு அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என மன்றாடினார். இயேசு கையை நீட்டி, அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்கிற்று. இயேசு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று கட்டளையிட்டார்.

ஆயினும் இயேசுவைப் பற்றிய செய்தி இன்னும் மிகுதியாகப் பரவிற்று. அவரது சொல்லைக் கேட்கவும் தங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறவும் பெருந்திரளான மக்கள் அவரிடம் கூடிவந்துகொண்டிருந்தார்கள். அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டிவந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————-
I 1 யோவான் 5: 5-13
II லூக்கா 5: 12-16

“நம்பிக்கையினால் நலம் பெறவும், உலகை வெல்லவும் முடியும்”

அன்போடு தொடுவதால் நலம்:

சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று நடத்தியது. அந்த ஆய்வு, ‘மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களிடம் வரும் நோயாளர்களை அன்போடு தொடுவதால் அவர்களுடைய உடலில் ஏதாவது மாற்றம் ஏற்படுகின்றதா?’ என்பது பற்றியது. ஆய்வின் முடிவில், மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களிடம் வரும் நோயாளர்களை அன்போடு தொடுவதால், அவர்கள் விரைவில் நலம் பெறுகின்றார்கள், அவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகின்றது என்ற உண்மையானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆம், அன்புத் தொடுதலுக்கு நலமளிக்கும் ஆற்றம் இருக்கின்றது. அதைத்தான் நியூயார்க் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு நமக்கு உணர்த்துகின்றது. நற்செய்தியில் இயேசுவை ‘ஆண்டவர்’ என்று நம்பி வந்த தொழுநோயாளரை, இயேசு தொட்டு நலமளிக்கின்ற நிகழ்வு இடம்பெறுகின்றது. நம்பிக்கையோடு நாம் இயேசுவிடம் செல்கிறபொழுது, அவர் எத்தகைய ஆசிகளை வழங்குகின்றார் என்று சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

யூதச் சமூகத்தில் தொழுநோயளர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. உடல் முழுவதும் புண்கள் நிறைந்திருக்கும் அவர்கள், தீண்டத்தகாதர்கள் போன்று ஊருக்கு வெளியே வாழவேண்டும் (லேவி 13,14). இப்படி உடல் முழுவதும் புண்கள் நிறைந்திருந்த, மக்களால் தீண்டத்தகாதராய் ஒதுக்கி வைக்கப்பட்டு, உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட தொழுநோயாளர் ஒருவர், இயேசுவை ஆண்டவர் என நம்பி, அவரிடம் சென்றால், தனக்கு எப்படியும் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வருகிறார். தொழுநோயாளர் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை, அவர் இயேசுவைப் பார்த்துச் சொல்லும், “ஆண்டவரே” என்ற வார்த்தையைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். இப்படித் தன்னிடம் நம்பிக்கைகொண்ட தொழுநோயாளரை இயேசு தொட்டு நலமளிக்கின்றார்.

இன்றைய முதல் வாசகம் இயேசுவை இறைமகன் என நம்பினால் உலகை வெல்ல முடியும் என்கிறது. எனவே, நாம் இயேசுவே ஆண்டவர், இயேசுவே இறைமகன் என்று நம்பி, உடல் நலமும் உலகை வெல்லும் ஆற்றலையும் பெறுவோம்.

சிந்தனைக்கு:

 ‘இயேசுவே ஆண்டவர். இயேசுவே இறைமகன்’ என நம்பி, அவரை அணுகிச் சென்றால், நமக்கு நலம் கிடைப்பது உறுதி.

 நோயாளர்களில் இயேசு இருக்கின்றார் (மத் 25: 36) என்பதை அறிந்து, அவர்களை அன்போடு நடத்துகின்றோமா?

 மெய்யாகவே இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார் (எசா 53: 4).

இறைவாக்கு:

‘கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்’ (யோவா 6: 29) என்பார் இயேசு. எனவே, நாம் இயேசுவே இறைமகன், ஆண்டவர் என நம்பி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.