பொதுக் காலத்தின் இருபதாம் வாரம்

திங்கட்கிழமை

யார் விண்ணகத்தில் செல்வந்தர்?

ஆண்டவர்மீது நம்பிக்கை வை!

மனிதர்கள் எப்போதும் ஒருவர் செய்த நன்மைகளை மிக எளிதாய் மறந்துவிடக் கூடியவர்கள். இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் எண்ணிலடங்கா நன்மைகளைச் செய்தார். அதிலும் குறிப்பாக, அவர் எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்களை மீட்டு, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டை வழங்கினார். அவர்களோ ஆண்டவர் செய்த எல்லா நன்மைகளையும் வசதியாய் மறந்துவிட்டு, வேற்று தெய்வங்களை வழிபட்டார்கள். இதனால் கடவுள் அவர்களை எதிரிகளின் கையில் ஒப்புவித்தார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் வரும் செல்வந்தனாகிய இளைஞன், “நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்கையில், இயேசு அவனிடம், “நிறைவுள்ளவராக விரும்பினார் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” என்பார் அவனிடம் மிகுதியான சொத்து இருந்ததால், இயேசு சொன்னதைக் கேட்டு முக வாட்டத்தோடு அவன் செல்வான்.

இந்தச் செல்வந்தனாகிய இளைஞன் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருக்காமல், தன்னிடமிருந்த செல்வத்தின்மீது நம்பிக்கை வைத்திருந்தான். ஒருவேளை அவன் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருந்தால், இயேசு சொன்னது போன்று, தன்னுடைய உடைமையை விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருப்பான்; அவனோ செல்வத்தின்மீது நம்பிக்கை வைத்திருந்ததால், அவனால் தன்னுடைய செல்வத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க முடியாமல் போய்விடுகின்றது. இதனால் அவன் விண்ணகத்தில் ஏழையாக இருக்கின்றான்.

இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 106 இல் அதன் ஆசிரியர், “உம் மக்கள்மீது இரங்கும்போது ஆண்டவரே, என்னை நினைவுகூரும்” என்று பாடுகின்றார். இதனை இன்றைய இறைவார்த்தையோடு நாம் தொடர்புபடுத்திப் பார்த்தால், நாம் நம்மிடம் இருக்கும் செல்வத்தின்மீது நம்பிக்கை வைக்காமல், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தால், ஆண்டவர் நம்மீது இரங்குவார் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்.

ஆகவே, நமக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கும் ஆண்டவர்மீது நாம் நம்பிக்கை வைத்து, அவர் காட்டும் வழியில் நடப்போம்.

பணமிருந்தும் ஏழை!

பாலைநிலத்தில் நடந்து சென்ற ஒருவர் வழிமாறி எங்கெல்லாமோ சுற்றித் திரிந்தார். இதற்கு நடுவில் அவருக்குத் தாகமும் பசியும் எடுக்கவே, எங்காவது பாலைநிலச் சோலை இருந்தால், தன்னுடைய தாகத்தையும் பசியையும் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

அப்போது அவரது கண்ணில் கையளவுத் தண்ணீர் தெரிந்தது. அதை அள்ளிப் பருகுவதற்கு அதன் அருகில் அவர் சென்றார். அங்கே ஒரு தோல்பை கிடந்தது. அதற்குள் எப்படியும் பேரிச்சம் பழம் இருக்கும்; அதை உண்டு பசியாறிக் கொள்ளலாம் என்று அவர் அதைத் திறந்து பார்த்தபோது, அதிர்ந்து போனார். ஏனெனில், அதில் விலைமதிக்க முடியாத முத்துக்கள் இருந்தன. ‘பேரிச்சம் பழம் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இந்த முத்துக்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?’ என்று அவர் தன்னையே நொந்து கொண்டார்.

பசியோடு இருக்கும்போது, பணத்தைத் தின்று பசியைப் போக்க முடியாது. அதைப் போன்றுதான் ஒருவர் வெறும் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியாது.

ஆண்டவரின் வார்த்தை

“கடவுளின் மனிதனாகிய நீ இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு.” (1 திமொ 6: 11).

தீர்மானங்கள்

Comments are closed.