நவம்பர் 27 : புதன்கிழமை. நற்செய்தி வாசகம்.

என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.

ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.

நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை.

“எனக்குச் சான்று பகர இவை உங்கட்கு வாய்ப்பளிக்கும்”

ஸ்பெயின் நாட்டின் தெற்குப்பகுதியில் மறைப்பணியைச் செய்துவந்தார் குருவானவர் ஒருவர். அவர் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை யாருக்கும் அஞ்சாமல் அவ்வளவு துணிச்சலாக அறிவித்து வந்தார். இதனால் அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது; தூக்குதண்டனைக்கான நாளையும் குறித்தது.

அவர் இருந்த சிறைச்சாலையில் கொலைகாரர்கள், திருடர்கள், கம்யூனிஸ்டுகள் என்று பலர் இருந்தனர். அவர்களெல்லாம் கொடிய அரசாங்கத்திற்கு எதிராக முழக்கமிடுவதும் சிறைச்சாலைச் சுவர்களில் அரசாங்க அதிகாரிகளைக் குறித்துத் தவறாக எழுதுவதுமாக இருந்தார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குருவானவர், அங்குள்ளவர்கட்கு ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார். அதனால் அவர் சிறைச்சாலைச் சுவரில். ‘ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்கட்கு அஞ்சவேண்டாம்; ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவர்க்கே அஞ்சுங்கள்” (மத் 10:28) என்ற இறைவார்த்தையையும் அதற்குக் கீழே, யோவான் 3:16 ல் வருகின்ற இறைவார்த்தையையும் எழுதி வைத்தார்.

தொடக்கத்தில் இவ்வார்த்தைகளை வித்தியாசப் பார்த்த சிறைவாசிகள், நாள்கள் செல்லச் செல்ல அவற்றைக் கருத்தூன்றிப் படிக்கவும் அதற்காக விளக்கத்தைக் குருவானவரிடம் கேட்கவும் தொடங்கினார்கள். அவரும் அவர்கட்கு அதற்கான விளக்கத்தை எடுத்துச் சொன்னார். இதனால் சிறையில் இருந்த பலர், ‘ஆண்டவர் இயேசு எங்களை இந்தளவுக்கு அன்புசெய்கின்றாரா…? அவர் எல்லாம் வல்லவரா…?’ என்று அவர்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்கள்.

ஒருநாள் அந்தச் சிறையில் இருந்த குற்றவாளி ஒருவர் குருவானவரைப் பார்க்க வந்தார். அவர் குருவானவரிடம், “இன்று எனக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப் போகிறார்கள். ஆனாலும், நான் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளப்போகிறேன். நீங்கள் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்னம் நான் சாவைக் குறித்து மிகவும் பயந்துகொண்டிருந்தேன். எப்பொழுது நீங்கள் ஆண்டவரின் அன்பைக் குறித்தும் அவர் அளிக்கும் நிலைவாழ்வைக் குறித்தும் எடுத்துச் சொன்னீர்களோ, அப்பொழுதே எனக்குச் சாவுபயம் போய்விட்டது. இப்பொழுது நான் என் அன்புத்தந்தையை சந்திக்கப்போகிறேன் என்ற உணர்வோடு செல்கின்றேன். பின்னொரு நாள் நாம் இருவரும் விண்ணகத்தில் சிந்திப்போம்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

இதைக்கேட்டு குருவானவர்க்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. இதற்குப் பின்பு அவர் ‘நாம் அறிவித்த நற்செய்தி வீண்போகவில்லை’ என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.

இயேசுவின் சீடர்களாகிய நமக்கு வரும் எதிர்ப்புகள், சாவல்கள், இக்கட்டான சூழ்நிலைகள்கூட, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்புகள்; அவற்றைக் கண்டு நாம் அஞ்சி நடுங்காமல், ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை எடுத்துரைக்கவேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தீமையிலும் நன்மை

நற்செய்தியில் இயேசு, எருசலேம் திருக்கோயிலின் அழிவையும் உலகில் ஏற்படும் அழிவுகளையும் குறித்துப் பேசிவிட்டு, நிறைவாக தன்னுடைய சீடர்கட்கு எப்படியெல்லாம் எதிர்ப்புகளும் சவால்களும் வரும் என்று பேசுகின்றார். இது குறித்து அவர் பேசுகின்றபோது, “….. எனக்குச் சான்றுபகர வாய்ப்பளிக்கும்” என்று கூறுகின்றார். ஆம், அந்நாள்களில் இயேசுவின் சீடர்களாக இருப்போர் ஆட்சியாளர்களிடமும் அதிகாரிகளிடமும் இழுத்துச் சொல்லப்படலாம். அதற்காக யாரும் அஞ்சத் தேவையில்லை; அவையெல்லாம் இயேசுவைப் பற்றி மக்கட்கு அறிவிப்பதற்கான சந்தர்ப்பங்கள். இதை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனதில் பதிய வைப்பது நல்லது.

எனவே, தீமையிலும் ஒரு நன்மை என்பதுபோல், நமக்கு வரும் எதிர்ப்புகள், சவால்கள் ஆகியவற்றை வெறும் எதிர்ப்புகளாகப் பார்க்காமல், இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கான தருணங்கள் என்பதை உணர்ந்து, இயேசுவைப் பற்றி மக்கட்கு அறிவிப்போம்.

Comments are closed.