உலக அமைதிக்காக, மதங்கள் ஒன்றிணைந்து உழைப்பது தேவை

உலக அமைதிக்காக உழைக்கவேண்டியது, கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியப் பணியாகவும், வருங்காலத் தலைமுறைக்குரிய சேவையாகவும் உள்ளது என ஐ.நா. பாதுகாப்பு அவைக்கூட்டத்தில் உரையாற்றினார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

‘அமைதியை கட்டியெழுப்புதலும் நிலைநாட்டலும் : உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதில் ஒப்புரவின் பங்கு’  என்ற தலைப்பில், ஐநா. பாதுகாப்பு அவையில் இடம்பெற்ற கூட்டத்தில், திருப்பீடத்தின் பிரதிநிதியாக உரை வழங்கிய பேராயர் அவுசா அவர்கள், வரலாறு முழுவதும் கத்தோலிக்கத் திருஅவை, மக்களிடையே, ஒன்றிப்பின் கருவியாகவும் அடையாளமாகவும் தொடர்ந்து செயல்பட்டுவருவதைச் சுட்டிக்காட்டினார்

மத்திய ஆப்ரிக்காவில் இடம்பெற்ற மோதல்களில், மதங்களின் பங்களிப்பை முக்கியப்படுத்தி தீ மூட்ட விரும்பியவர்கள் மத்தியில், பாங்கி (Bangui) கத்தோலிக்கப் பேராயரும், அந்நகரில் பணியாற்றும் இவாஞ்சலிக்கல் போதகரும், இஸ்லாமிய மதகுரு ஒருவரும், துணிச்சலுடன் ஒன்றிணைந்து நின்று, அமைதிக்காக குரல் கொடுத்ததைச் சுட்டிக்காட்டிய பேராயர் அவுசா அவர்கள், அந்நாட்டில் 2015ல்  திருத்தூதுப்பயணம் மேற்கொண்டபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்லாமிய மதக்குருவோடு ஒரே வண்டியில் பொது மக்களிடையே பயணம் செய்து, அமைதிக்கு அழைப்பு விடுத்தது, நல்ல பலன்களைக் கொணர்ந்துள்ளது என கூறினார்.

தென் சூடான் அரசியல் தலைவர்களின் கால்களை முத்தி செய்து நாட்டின் அமைதிக்காக ஒன்றிணைந்து உழைக்குமாறு திருத்தந்தை அழைப்பை விடுத்தது குறித்தும் தன் உரையில் எடுத்துரைத்தார், பேராயர் அவுசா.

நாட்டின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் அனைவரும், பிரிவினைகளை வெற்றி கொள்ளும் நோக்கத்தில், உடன்பிறந்த உணர்வில் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தவே, இச்செயலை திருத்தந்தை ஆற்றினார் என பேராயர் அவுசா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

Comments are closed.