மறு உலக வாழ்வு பற்றி திருத்தந்தையின் மூவேளை செப உரை

நாம் இவ்வுலகில் வாழும் வாழ்வைவிட, மேலான ஒன்று, நமக்காகக் காத்திருக்கிறது என்றும், மரணமற்ற அவ்வாழ்வில், நாம் கடவுளின் குழந்தைகள் என்பது தெளிவாக வெளிப்படுவதே மறு உலக வாழ்வு என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, நவம்பர் 10, இஞ்ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை உரையில் இவ்வாறு கூறியத் திருத்தந்தை, ஞாயிறு வழிபாட்டின் வாசகங்களை மையப்படுத்தி மேலும் சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நம்மை அன்புகூர்ந்து, நம்மீது அதிக அக்கறை கொண்டுள்ள இறைவனுக்கே நம் வாழ்வு முற்றிலும் சொந்தமானது என்பதை, தன் மூவேளை செப உரையில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.

வாழ்வின் ஆதாரமான தந்தையாம் இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதன் அடிப்படையில் இயேசுவின் உயிர்ப்பு அமைந்துள்ளது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னலம் மிகுந்து தனித்தீவாக ஒருவர் வாழும்போது, அங்கு வாழ்வு இருப்பதில்லை, மாறாக, உண்மையான உறவோடும், பற்றுறுதியோடும் ஒருவர் மற்றவர்களுக்காக வாழும்போது, நம்மால் உயிர்ப்பை அனுபவிக்க முடியும் என்று கூறினார்.

மேலும், இச்சனிக்கிழமையன்று, ஸ்பெயின் நாட்டில் அருளாளராக அறிவிக்கப்பட்ட அமல உற்பவ அன்னை மற்றும் திருநற்கருணை மறைப்பணி சகோதரிகள் துறவு சபையை நிறுவிய María Emilia Riquelme Zayas அவர்களின் புனித வாழ்வைப் பற்றி பாராட்டிப் பேசினார்.

Comments are closed.