அன்பு இறப்பை வெற்றிகொள்கிறது! அதுவே நிலைவாழ்விற்கான பாதை

அன்பு இறப்பை வெற்றிகொள்கிறது, அன்பில், கடவுள் நம்மை நம் அன்புக்குரியவர்களுடன் ஒன்று சேர்ப்பார். பிறரன்புப் பணிகளில் நாம் ஒன்றித்துப் பயணித்தால், நம் வாழ்க்கையே கடவுளிடம் எழும் இறைவேண்டலாக மாறி, இறந்த நம்பிக்கையாளர்களுடன் நம்மை ஒன்றிணைத்து, நிலை வாழ்வின் மகிழ்ச்சியில் அவர்களை மீண்டும் சந்திக்கக் காத்திருக்கும்போது நம்மை அவர்களிடம் நெருங்கி வரச் செய்கிறது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 2, ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவரின் திருவிழாவை முன்னிட்டு, உரோமையிலுள்ள வெரோனா கல்லறையில் தலைமையேற்று நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இறந்தவர்களை, குறிப்பாக, நம் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதன் அர்த்தத்தைப் பற்றி உரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவ நினைவு என்பது வெறும் ஏக்கம் அல்லது துயரம் அல்ல, மாறாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அடிப்படையாகக் கொண்ட எதிர்நோக்கு நிறைந்த இறை நம்பிக்கைச் செயல் என்று விளக்கினார்.

இறப்பின் மீதான இயேசுவின் வெற்றியின் வழியாக, நமது நினைவுகள் கடவுள் வாக்குறுதியளித்த எதிர்கால நிலைவாழ்விற்கான அடையாளங்களாகின்றன என்றும், முடிவற்ற விருந்தான அவ்வாழ்வில் நாம் இயேசுவுடனும் நமக்கு முன் சென்றவர்களுடனும் மகிழ்வடைவோம் என்றும் மொழிந்தார்.

Comments are closed.