கடவுளின் மக்களாக, தூய ஆவியின் உடலாக ஒன்றிணைவோம்

ஏழு புதிய புனிதர்களைத் திருஅவையில் இணைத்த கூட்டுத்திருப்பலியானது திருஅவையின் ஒன்றிப்பு, இடம் காலம் என்பது ஒவ்வொரு மொழி மற்றும் கலாச்சாரத்தில் உள்ள அனைத்து நம்பிக்கையாளர்களையும் உள்ளடக்கியது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்றும், கடவுளின் மக்களாகவும், கிறிஸ்துவின் உடலாகவும், தூய ஆவியார் வாழும் ஆலயமாகவும் நம்மை ஒன்றிணைக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 20, திங்களன்று வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் புனிதர் பட்டத் திருப்பலியில் பங்கேற்பதற்காக வந்திருந்த திருப்பயணிகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம் என பல மொழிகளில் தனது கருத்துக்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

ஆர்மீனிய பேராயரான புனித இக்னேஸியஸ் மலோயன் அவர்கள் கிறிஸ்துவின் இதயத்திற்குப் பிடித்த மேய்ப்பராக இருந்தார் என்றும், மிகுந்த சிரமமான காலங்களில் அவர் தனது மந்தையை கைவிடாது, நம்பிக்கையில் தங்களை பலப்படுத்த அவர்களை ஊக்குவித்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.

விடுதலை செய்யப்பட வேண்டுமெனின் மதம் மாற வேண்டும் கிறிஸ்தவத்தை துறக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டபோதும் கூட அதனை ஏற்காது நம்பிக்கையில் உறுதியோடு இருந்தார் என்றும்,  கற்களைப்போன்ற உறுதியான நம்பிக்கைக் கொண்ட அர்மீனிய மக்களுக்கு புதிய புனிதர் நல்லிணக்கம் மற்றும் அமைதியின் பலனைத் தரட்டும் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

பாப்புவா நியூ கினி மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையை புனித பீட்டர் தோ ரோத்தில் அவர்கள் பிரதிபலிக்கின்றார் என்றும், பல்வேரு சிரமங்களுக்கு மத்தியில் செபத்தில் உறுதியுடன் நிலைத்திருந்த அவரிடம் நம்பிக்கையின் உண்மைகளைப் பாதுகாக்கவும், சோதனைகளில் எப்போதும் கடவுளிடம் நம்மை ஒப்படைக்கவும் அவரின் அருளை நாடுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

புனித ஜோஸ் கிரகோரியோ ஹெர்னாண்டஸ் மற்றும் புனித கார்மென் ரெண்டிலஸ் அவர்களின் ஊரான வெனிசுலா மக்கள் அனைவரும், ஒரே தாயகத்தின் குழந்தைகளாகவும் சகோதர சகோதரிகளாகவும் தங்களை அங்கீகரித்து, புனிதர்கள் வீரதீரமாக வாழ்ந்த நற்பண்புகளின் வெளிச்சத்தில் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சிந்திக்க இறைவனை ஒரு வலுவான தூண்டுதலாகக் கொள்ளவும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

நம்பிக்கை வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தைக் கண்டறிய உதவுகிறது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நோயாளிகள், ஏழைகள் மற்றும் சிறியவர்களுக்கு பணியாற்றுவதன் வழியாக அந்த நம்பிக்கையைக் கட்டியெழுப்ப புதிய புனிதர்கள் நமக்கு வலியுறுத்துகின்றார்கள் என்றும் கூறினார்.

Comments are closed.