இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 30.12.2023
துயர் நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
“அவரை எனக்குத் தெரியும்” எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது.” என புனித யோவான் இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார்.
ஏனெனில் இயேசு, “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்” (யோவா. 15: 14) என்கிறார்.
நாம் இயேசுமீது உண்மையான அன்பு கொண்டு அவரது கட்டளைகளை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
“இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி;” என சிமியோன் இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூறுகிறார்.
தன்னுடைய வாழ்வாலும், போதனையாலும் தான் உலகிற்கே ஒளி என்பதை உணர்த்திய இயேசு , “நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கின்றீர்கள்” (மத் 5: 14) என்று தம்முடைய பிள்ளைகளாகிய நம்மை பார்த்தும் கூறுகிறார்.
உண்மையிலேயே நாம் உலகிற்கு ஒளியாக இருக்கின்றோமா? என்று ஆழமாக சிந்திக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.” என சிமியோன் கூறுகிறார்.
பாவங்களில் மூழ்கிக் கிடந்த மனித இனத்தை மீட்க தனது மகனை நமக்குத் தந்தருளிய நம் இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
“இயேசுவின் பெயருக்காகவும், திருச்சபையின் பாதுகாவலுக்காகவும் நான் மரணத்தைத் தழுவ தயாராக இருக்கிறேன்” என்று கூறி மறைசாட்சியாக மரித்த பேராயர், இன்றைய புனிதர் தாமஸ் பெக்கட்டை திருச்சபைக்குத் தந்த நமது இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.