டிசம்பர் 17 : நற்செய்தி வாசகம்

நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்

நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 6-8, 19-28

கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார். அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.

எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல” என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அப்போது, “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்று அவர்கள் கேட்க, அவர், “நானல்ல” என்றார். “நீர் தாம் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டபோதும், அவர், “இல்லை” என்று மறுமொழி கூறினார். அவர்கள் அவரிடம், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “‘ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது’ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே” என்றார்.

பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள் அவரிடம், “நீர் மெசியாவோ எலியாவோ வரவேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள். யோவான் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்; அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றார். இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————-

“ஆண்டவரில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்”

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு

I எசாயா 61: 1-2a, 10-11

II 1தெசலோனிக்கர் 5: 16-24

III யோவான் 1: 6-8, 19-28

“ஆண்டவரில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்”

நிகழ்வு

இரஷ்யாவை ஆண்டுவந்த வந்த மன்னன் ஒருவனுடைய அரசபையில் பெண்ணொருவர் பணிபுரிந்து வந்தார். ஒருநாள் இவர் ஒரு மறைப்பணியாளர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டுக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். மட்டுமல்லாமல் இவரும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார்.

இச்செய்தி மன்னனுடைய செவிகளை எட்டியது. இதனால் அவன் வெகுண்டெழுந்து, அந்தப் பெண்மணியைப் பிடித்துச் சிறையில் அடைத்துவைத்து, இருபத்து நான்கு மணிநேரங்களுக்குக் கடுமையாகச் சித்திரவதை செய்யச் சொன்னான். சிறையதிகாரியும் மன்னன் இட்ட ஆணைக்கு இணங்க, அந்தப் பெண்மணியைக் கடுமையாகச் சித்திரவதை செய்தார்.

இருபத்து நான்கு மணிநேரங்கள் முடிந்த பின் மன்னன், சிறையதிகாரியிடம் அந்தப் பெண்மணியை தன் முன்னே அழைத்து வரச்சொன்னான். அவரும் அவ்வாறு செய்தார். அப்பொழுது மன்னன் அந்தப் பெண்மணியிடம், “கிறிஸ்துவின்மீது நீ வைத்திருக்கும் நம்பிக்கையைத் துறந்துவிட்டு, என்னுடைய அரசபையில் இணைந்து மகிழ்ந்திருக்கத் தயாரா?” என்றான். அதற்கு அந்தப் பெண்மணி, “இத்தனை ஆண்டுகளும் நான் உங்களுடைய அரசபையில் இருந்து மகிழ்ந்ததை விடவும், ஒரு நாள் என் ஆண்டவர் இயேசுவோடு ஒன்றித்திருந்தால் கிடைத்த மகிழ்ச்சி மிகுதி. அதை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது” என்றார்.

ஆம், நாம் ஆண்டவரில் நிலைத்திருக்கும்பொழுது அல்லது ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும்பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது. ‘மகிழ்ச்சியின் ஞாயிறு’ என்று அழைக்கப்படும், திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதால் ஒருவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி எத்தகையது என்பதைப் பற்றி எடுத்துச் சொல்கின்றது. அதைப் பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கப் பவுல் விடுக்கும் அழைப்பு

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு என்றாலே, ஆண்டவர் தரும் மகிழ்ச்சியைப் பறைசாற்றக் கூடியதாக இருக்கும். இன்றைய இறைவார்த்தையும் அதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், “எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று தெசலோனிக்க மக்களிடம் கூறுகின்றார். புனித பவுல் தெசலோனிக்க மக்களிடம் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், அவர்கள் புனித பவுல் அறிவித்த நற்செய்தியை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் திறந்த மனத்தோடும் ஏற்றுக்கொண்டார்கள் என்பதாலேயே ஆகும். அதனாலேயே புனித பவுல் தெசலோனிக்க மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டு இத்தகைய வார்த்தைகளைக் கூறுகின்றார்.

“எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று தெசலோனிக்க மக்களிடம் கூறுகின்ற புனித பவுல், எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதற்கான வழிமுறையையும் எடுத்துச் சொல்கின்றார். இன்றைக்குப் பலர் மகிழ்ச்சியைத் தவறான வழிகளில் சென்று, எதிலெல்லாமோ தேடிக்கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புனித பவுல், அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொண்டு, அதன்மூலம் மகிழ்ச்சியாக இருங்கள் என்கின்றார். இவ்வுலகில் நல்லது அல்லது நல்லவர் என்றால், அது ஆண்டவர் ஒருவரே (மத் 19: 17). ஆகவே, நல்லவராம் கடவுளைப் பற்றிக்கொண்டு மகிழ்ந்திருக்க வேண்டும் என்று புனித பவுல் அறைகூவல் விடுக்கின்றார். இன்றைய நற்செய்தியில் நல்லவராம் கடவுளைப் பற்றிக்கொண்டு, அவருக்குச் சான்று பகர்ந்த திருமுழுக்கு யோவானைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் எப்படி ஆண்டவருக்குச் சான்று பகர்ந்தார் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

Comments are closed.