நவம்பர் 24 : நற்செய்தி வாசகம்

நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்

நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48

அக்காலத்தில்

இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், “ ‘என் இல்லம் இறைவேண்டலின் வீடு’ என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று கூறினார்.

இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————-

என் இல்லம் இறைவேண்டலின் வீடு”

I மக்கபேயர் 4: 36-37, 52-59

II லூக்கா 19: 45-48

“என் இல்லம் இறைவேண்டலின் வீடு”

கோயிலை உங்களால் எதுவும் செய்ய முடியாது:

ஒரு சிற்றூரில் இருந்த நாத்திகர் ஒருவர் அதே ஊரில் இருந்த ஒரு கிறிஸ்தவ விவசாயி, கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு ஒருநாள் கூடத் தவறாமல் கோயிலுக்குச் சென்று வருவதை வியப்போடு பார்த்தார்.

ஒருநாள் நாத்திகர், விவசாயியிடம், “உங்களுடைய கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கப் போகிறேன். இதன்மூலம் நான் உங்களுடைய மனத்திலிருந்து இயேசுவைப் பற்றிய எண்ணமே இல்லாமல் செய்யப் போகிறேன். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்க்கிறேன்” என்று மிரட்டினார். அதற்கு அந்த விவசாயி அவரிடம், “நீங்கள் வானத்தையும் அதில் உள்ள விண்மீன்கள்கூட கீழே இழுத்துப் போடலாம்; ஆனால், எங்களுடைய கோயிலை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், எங்களது கோயில் இயேசுவில் அடித்தளமிடப்பட்டிருக்கின்றது” என்று தீர்க்கமான குரலில் மறுமொழி பகர்ந்தார்.

ஆம், கடவுளை அல்லது இயேசுவை அடித்தளமாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டிருக்கும் கோயிலை யாராலும் எதுவும் செய்ய முடியாது. இன்றைய இறைவார்த்தை எருசலேம் திருகோயிலில் நடந்த முறைகேடுகள் களையப்பட்டு, அதன் புனிதத் தன்மை நிலைநாட்டப்படுவதைப் பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

யூதர்களைப் பொறுத்தளவில் எருசலேம் திருக்கோயில் அவர்களுடைய வாழ்வில் ஒரு முக்கிய அங்கம். இன்னும் சொல்லப்போனால், அது அவர்களுடைய அடையாளமாக இருந்தது. அப்படிப்பட்ட எருசலேம் திருக்கோயிலின் பலிபீடத்தில் பாகாலை தெய்வத்தின் சிலையை நிறுவி, அதைத் தீட்டுப்படுத்தினான் நான்காம் அந்தியோக்கு எப்பிபான் என்ற மன்னன். இதை மத்தத்தியாவின் மகனான யூதாவும் அவருடைய சகோதரர்களும் அப்புறப்படுத்தி, கோயில் அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாடுகின்றார்கள். அதைப் பற்றித்தான் இன்றைய முதல் வாசகம் எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தியில் இயேசு, எருசலேம் திருக்கோயிலுக்கும் நுழைகின்றபோது, அது இறைவேண்டலின் இல்லமாக இல்லாமல், கள்வர் குகையாக இருந்ததால், அங்கே விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை விரட்டியடித்து, அதன் புனிதத் தன்மையை நிலைநாட்டுகின்றார். ஆம், கோயில் என்பது இறைவேண்டலின் இல்லமாக இருக்கவே ஒழிய, அது வியாபாரக் கூடமாக இருந்து, அதன் புனிதத் தன்மையை இழந்து நிற்கக்கூடாது. எப்பொழுது கோயில் இறைவேண்டலின் வீடாக இருக்கின்றதோ, அப்பொழுதுதான் அங்கே கடவுள் குடிகொண்டிருப்பார்.

Comments are closed.