ஏழைகள் முன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு உலக வறியோர் தினத்தைக் கொண்டாடத் துவங்கியதைத் தொடர்ந்து, நவம்பர் 19 ஆம் தேதி புனித பேதுரு வளாகத்தில் ஏழாவது உலக வறியோர் தினத்தின் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு திருத்தந்தை தலைமை தாங்குவார் என  பிறரன்பு சேவைக்கான திருப்பீடத் துறை  அறிவித்துள்ளது.

ஏழைகள் முன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே (தோபித்து 4,7) என்பது 2023 ஆம் ஆண்டு உலக வறியோர் தினத்தின் கருப்பொருளாக எடுக்கப்பட்டுள்ளதையொட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தியில், கருணை மிக்க இறைத்தந்தையின் பலனளிக்கும் அடையாளம் இந்த வறியோர் தினம் என்றும், திருஅவை தனது மேய்ப்புப் பணியில் படிப்படியாக வேரூன்ற வலியுறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

வறுமை ஒரு பெரும் நதி போல, நமது நகரங்களைக் கடந்து, நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஓடி நம்மை மூழ்கடிப்பதாகத் தெரிகிறது எனக்கூறும் திருத்தந்தை, உதவி, ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காக மன்றாடும் நம் ஏழை சகோதர சகோதரிகளின் தேவைகளுக்கு பாராமுகமாக வாழ்கிறோம் என்றும், வசதியானதொரு வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கான அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், உலக வறியோர் தினத்தன்று, நற்கருணை கொண்டாட்டத்திற்குப் பிறகு புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் இத்தாலியில் உள்ள ஹில்டன் ஹோட்டலால் மதிய உணவு வழங்கப்படும் எனவும்,  புனித பேதுரு சதுக்கத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்படும் இரக்கத்தின் அன்னை மருத்துவமுகாமில், தேவைப்படுபவர்களுக்கு இலவச மருத்துவ சேவையை வழங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட ஏறக்குறைய 50 மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள் என அன்றைய நிகழ்வுகள் குறித்து பிறரன்பு சேவைக்கான திருப்பீடத் துறை  தெரிவித்துள்ளது.

Comments are closed.