அமெரிக்க அதிபருடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்

புனித நாட்டில் அமைதி நிலவ உதவுங்கள் என்று அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

அக்டோபர் 22, இஞ்ஞாயிறன்று மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், இந்த உரையாடல் ஏறத்தாழ 20 நிமிடங்கள் தொடர்ந்ததாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவிக்கிறது.

இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, உலகில் நிலவிவரும் மோதல் சூழ்நிலைகள் மற்றும் அமைதிக்கான பாதைகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் குறித்தும் இருவரும் கலந்துரையாடிதாகவும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

எகிப்தில் இருந்து காசாவிற்குள் சில மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக அமெரிக்க அரசுத் தலைவர் பிடன் அவர்கள், அக்டோபர் 18 புதன்கிழமையன்று டெல் அவிவ் நகருக்கு சிறியதொரு பயணத்தை மேற்கொண்டார் என்பது நினைவுகூரத் தக்கது.

அக்டோபர் 7,சனிக்கிழமையன்று, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் குறைந்தது 1,400 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அரசுத் தலைவர் பிடன் அவர்கள் இஸ்ரேலுக்குத் தனது ஆதரவையும் தெரிவித்தார்

Comments are closed.