புலம்பெயர்ந்த மாணவர்க்கு தொடர்கல்வி வழங்க உள்ள யுனெஸ்கோ
அர்மீனியாவின் வேண்டுகோளின் பேரில், கராபக் புலம்பெயர்ந்தோரின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வரும் நாட்களில் யெரெவன் பகுதிக்கு அவசர பணியை அனுப்ப உள்ளதாகவும், இடம்பெயர்ந்த மாணவர்களுக்கான தொடர்கல்வியை உறுதிசெய்து அவர்களுக்கு உளவியல் ஆதரவை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு.
அக்டோபர் 5 வியாழன்று வெளியிட்ட அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ள யுனெஸ்கோ, கராபாக் பகுதியில் இருந்து அண்மைய நாள்களில் ஏறக்குறைய ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அர்மீனியா பகுதிக்குப் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், அவர்களில் மூன்றில் ஒரு பங்கு இளையோர் மற்றும் சிறார் என்றும் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2 திங்கட்கிழமை, யுனெஸ்கோவின் ஆதரவைப்பெற அர்மீனியா அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்த நிலையில், கல்வி ஆணையின் ஒரு பகுதியாக, யுனெஸ்கோவின் இயக்குநர் ஆட்ரி அசோலே இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்பதாகப் பதிலளித்தார்.
இதன் அடிப்படையில் வரும் நாள்களில், இடம்பெயர்ந்த மற்றும் புலம்பெயர்ந்த மாணவர்களுக்கான கல்வித் தொடர்ச்சியை உறுதிசெய்யவும்,தேசிய அதிகாரிகளுடன் அதற்கான ஒரு செயல் திட்டத்தை உருவாக்கவும், யுனெஸ்கோ அவசரகாலப் பணியினை யெரெவனுக்கு அனுப்ப உள்ளது.
மாணவர்களுக்கு நல்ல கற்றல் நிலைமைகளை ஏற்படுத்துதல், தீர்வு அல்லது விருப்பத் திட்டங்களுக்கான அணுகலை வழங்குதல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கத் தேவையான உளவியல் ஆதரவை வழங்குதல் போன்ற செயல்திட்டங்களைச் செய்ய உள்ளது.
Comments are closed.