இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

இஸ்ரேல் – பாலஸ்தீனம் பகுதிகளில் தற்போது நடந்துவரும் சண்டையில் இறந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், அங்கு அமைதி மீண்டும் திரும்ப வேண்டியும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகியதைக் கண்டு, ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொண்டார்.” என வாசித்தோம்.

நாம் நமது தவறுகளுக்கு மனம் வருந்தி முழுமையாக மனம் மாறினால் அவை எத்தகைய பாவங்களாக இருப்பினும் ஆண்டவர் நம்மை முழுமையாக மன்னிப்பார் என்பதை உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

“எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர் என (நீதி மொழிகள் 8: 34) சொல்கிறது.

இன்றையத் திருப்பலி நற்செய்தியில் ஆண்டவருக்கு அருகில் இருந்து அவருக்கு செவி கொடுத்த மரியாவைப் போன்று பேறுபெற்றவர்களாய், நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டவர்களாக நாம் வாழ வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

ஆப்பிரிக்க மிஷினரியும், ஆயருமான இன்றைய புனிதர் புனித டேனியல் கம்பொனி, மறைப்பணியாளர்களின் பாதுகாவலராவார்.

அனைத்து மறைப்பணியாளர்களின் ஆன்ம சரீர நலன்களுக்காக இப்புனிதரின் பரிந்துரையை நாடி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.