செப்டம்பர் 30 : நற்செய்தி வாசகம்
மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்.
செப்டம்பர் 30 : நற்செய்தி வாசகம்
மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45
இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், “நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்” என்றார்.
அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————————–
“அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்”
பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் சனிக்கிழமை
I செக்கரியா 2: 1-5, 10-11a
II லூக்கா 9: 43b-45
“அவர் உன் நடுவில் தங்கியிருப்பார்”
பயணிகளோடு இருந்து பயணிகளைக் காப்பாற்றியவர்:
சில ஆண்டுகளுக்கு முன்பு, கடலில் சென்றுகொண்டிருந்த ஒரு சொகுசுக் கப்பல் திடீரென உடைந்து, கடல் தண்ணீர் அதற்குள் புகுந்தது. இதனால் கப்பலில் இருந்த பலரும் அலறியடித்துக் கொண்டு இங்கும் ஓடினர். ஒருசிலர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்
அப்பொழுது அவர்கள் நடுவில் தோன்றிய ஒரு மனிதர், “யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் சொல்வது போல் செய்தால், இங்கிருடுந்து எல்லாரும் பத்திரமாகக் கரையை அடையலாம்’ என்றார். இதற்கு பிறகு அவர் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் ஆகியோரைப் கப்பலில் இருந்த சிறு சிறு படகுகளில் ஏற்றிக் கரைக்கு அனுப்பி வைத்தார்; நீந்தத் தெரிந்தவர்களை நீந்தியே கரைக்கு போக அனுப்பி வைத்தார். இது போக, கப்பலில் எஞ்சியிருந்தவர்களைத் தன் தோள்மேல் சுமந்துகொண்டு நீந்திச் சென்று பாதுகாப்பான இடத்தில் போய் விட்டுவந்தார்.
இப்படி எல்லாரையும் காப்பாற்றிய பிறகு, கப்பலுக்குள் வேறு யாராவது சிக்கி இருக்கின்றார்களா என்று அவர் பார்த்துக்கொண்டே வந்தார். அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக, கப்பலில் உடைந்துபோயிருந்த ஒரு கட்டையானது அவர்மேல் விழ, அவர் அப்படியே கடலுக்குள் மூழ்கி இறந்துபோனார்.
மறுநாள் செய்தித்தாளில், கடலில் சென்ற அந்தச் சொகுசுக் கப்பல் உடைந்துபோன செய்தி வந்திருந்தது. கூடவே கப்பலில் பயணம் செய்த எல்லாரையும் காப்பாற்றி, இறுதியில் தன் உயிரைத் துறந்த மனிதரைப் பற்றிய செய்தியும் வந்திருந்தது. அதைப் பார்த்த, உயிர் பிழைத்த பயணிகள், ‘இவர் நம்மோடு இருந்து நமது உயிரைக் காப்பாற்றியவரல்லவா!’ என்று சொல்லிக் கண்ணீர் விட்டு அழுதனர்.
ஆம், கப்பல் உடைந்து, அதில் பயணம் செய்த யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றபோது, அவர்கள் நடுவில் இருந்த மனிதர் எல்லாரையும் காப்பாற்றி, அவர்களுக்காகத் தன் உயிரையும் கொடுத்தார். இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் செக்கரியா வழியாக, “இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்” என்கிறார் ஆண்டவர். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இறைவாக்கினர் செக்கரியா எருசலேம் திருக்கோயிலைப் பற்றிக் காணுகின்ற மூன்றாவது காட்சிதான் இன்றைய முதல் வாசகமாக இருக்கின்றது. இக்காட்சியில் வரும் தூதர், ஆண்டவர் கூறுவதாக இறைவாக்கினர் செக்கரியாவிடம், “இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்” என்கிறார்.
பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்த யூதா நாட்டினருக்கு ஆறுதல் தருவது மாதிரியாக இருக்கும் இவ்வார்த்தைகள், மெசியா வந்து மக்கள் நடுவில் குடிகொள்ள இருப்பதால் மக்கள் தங்கள் கவலைகளெல்லாம் மறைந்து, மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ற செய்தியை உணர்த்துவதாக இருக்கின்றது. யோவான் நற்செய்தியாளர் இதைத்தான், “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்” (யோவா 1: 14) என்பார். ஆகையால், நம் நடுவில் குடிகொள்ள வரும் – குடிகொண்டிருக்கும் – கடவுளின் பேரன்பை உணர்ந்தவர்களாய், அதில் நாளும் நிலைத்திருப்போம்
Comments are closed.