செப்டம்பர் 12 : நற்செய்தி வாசகம்
கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்
கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19
அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.
இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.
அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————————-+
“ஆண்டவரோடு ஒன்றித்து வாழுங்கள்”
பொதுக்காலம் இருபத்து மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I கொலோசையர் 2: 6-15
II லூக்கா 6: 12-19
“ஆண்டவரோடு ஒன்றித்து வாழுங்கள்”
உங்கள் வெற்றிக்குக் காரணம் என்ன?
இங்கிலாந்தில் ஒரு பெண் நற்செய்திப் பணியாளர் இருந்தார். அவரது போதனைக் கேட்க கூட்டம் அலைமோதியது. தவிர, அவரால் பலரும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார்கள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு அவருக்குத் தெரிந்த ஒருசிலர் அவரிடம், “உன்னுடைய மொழிப்புலமையும், நீங்கள் பேசுகின்ற விதமும், உன்னுடைய அழுகும்தான் இத்தனை பேரை உன்னுடைய போதனையின்பால் கட்டிப் போட்டிருக்கின்றன” என்றார்கள். அதற்கு மறுப்புத் தெரிவித்த அந்தப் பெண் நற்செய்திப் பணியாளர், “இவையெல்லாம் ஒருசில காரணங்களாக இருந்தாலும், நான் ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்வதாலேயே இத்தனை பேர் என்னுடைய போதனையைக் கேட்க வருகின்றார்கள். அதுவே என்னுடைய வெற்றிக் காரணமாக இருக்கின்றது” என்று தீர்க்கமாகச் சொன்னார்.
ஆம், ஒருவர் ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்கின்றபோது மட்டுமே, அவரால் அளப்பரிய செயல்களைச் செய்யமுடியும். இன்றைய இறைவார்த்தை நாம் ஆண்டவரோடு ஒன்றித்து வாழவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கொலோசையில் இருந்த மக்கள், இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் நடுவில் வந்த ஒருசில போலிப் போதகர்கள், இயேசுவை இறைமகன் அல்ல என்று அவரது இறைத்தன்மையை மறுத்து, மக்களுக்குக் கற்பித்தார்கள். இதை அறிந்த பவுல் அவர்களிடம், “இறைத்தன்மையின் முழு நிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கின்றது” என்று சொல்லிக் “கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு ஒன்றித்து வாழுங்கள்” என்கிறார்.
முதல்வாசகத்தில், பவுல் கடவுளோடு ஒன்றித்து வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் அதே வேளையில், நற்செய்தியில் இயேசு ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்வதைக் காண முடிகின்றது. எவ்வாறு அவர் ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்ந்தார் எனில், அவர் செய்த இறைவேன்டலின் மூலமாக. ஆம், இயேசு தான் செய்த இறைவேண்டலின் மூலமாகத் தந்தைக் கடவுளோடு ஒன்றித்திருந்தார். அதனாலேயே அவரால் பல வல்ல செய்ய முடிந்தது. நாமும் ஆண்டவரோடு ஒன்றித்திருந்தால் பவுல் சொல்வது போன்று நிறைவான வாழ்வினைப் பெறுவோம் என்பது உறுதி.
Comments are closed.