செப்டம்பர் 9 : நற்செய்தி வாசகம்

ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?

ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5

ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர். பரிசேயருள் சிலர், “ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு மறுமொழியாக, “தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்று கூறினார். மேலும் அவர்களிடம், “ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————–

மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 09) –

எப்போதும் குறைகாணும் மனிதர்கள்!

இங்கிலாந்து நாட்டில் டக் ஆப் தேவோன்ஷிரே (Duke of Devonshire) என்றொரு இடமுண்டு. இங்கே பல்லாயிரக்கணக்கான ஓவியங்கள் மக்களுடைய பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

ஒருசமயம் இவ்வோவியங்களைப் பார்வையிட ஒரு வெளிநாட்டுக் குழு வந்தது. அந்தக் குழுவில் இருந்த எல்லாரும் ஓவியங்களை மிகவும் ரசித்துக்கொண்டே சென்றனர். ஒரே ஒரு பெண்மணி மட்டும் எல்லா ஓவியங்களின் அருகே சென்று உற்றுப் பார்ப்பதும், பின்னர் திரும்பி வருவதுமாக இருந்தார். இதனை அந்த ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் நிர்வாகி கவனித்துக்கொண்டே இருந்தார்.

எல்லா ஓவியங்களையும் அந்தக் குழுவினர் பார்த்துவிட்டு திரும்பிச் செல்லும் வேளையில், ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் நிர்வாகி குறிப்பிட்ட அந்தப் பெண்ணை அழைத்து, “எல்லா ஓவியங்களையும் உற்றுப் பார்த்துக்கொண்டே வந்தீர்களே, ஓவியங்கள் எல்லாம் எப்படி இருக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, “எல்லா ஓவியங்களும் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒரு குறை கண்டுபிடிக்கலாம் என்று முயன்று பார்த்தான். என்னால் முடியவில்லை” என்றார். இதைக் கேட்ட ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் நிர்வாகிக்கு மயக்கம் வராத குறைதான்.

இரசிப்பதற்கும் பாராட்டுவதற்கும் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றபோது, ஏதாவது குறைகண்டு பிடிக்கவேண்டும் என்கிற நினைப்போடு அலையும் மனிதர்கள் இருப்பது மிகவும் வேதனையான விஷயம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வழியே நடந்து செல்கிறார்கள். அப்போது சீடர்கள் பசியில் கதிர்களைக் கொய்து உண்கிறார்கள். இதைப் பார்த்த பரிசேயர்கள், ஓய்வுநாள் சட்டத்தை இயேசுவின் சீடர்கள் மீறியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். பரிசேயர்களின் குற்றச்சாற்றுக்கு இயேசு என்ன பதிலளித்தார் என்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது.

வயல்வழியே நடந்து செல்கிறவர்கள் கதிர்களைக் கொய்து உண்பது என்பது ஒன்று தவறில்லை. சட்டம் இதை அனுமதிக்கின்றது (இச 23:25). ஆனால் சீடர்கள் இதனை ஓய்வுநாளில் செய்ததுதான் பரிசேயர்களால் மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதில், கொய்தல், கையில் வைத்து கசக்குதல், புடைத்தல், உண்ணுதல் என நான்கு செயல் அடங்கி இருக்கின்றன. ஓய்வுநாளில் ஒரு வேலையும் (?) செய்யக்கூடாது என்று சட்டம் சொல்லும்போது சீடர்கள் இப்படி நான்கு செயல்களைச் செய்ததனால் பரிசேயர்கள் சீடர்கள்மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

பரிசேயர்களின் குற்றச்சாட்டுக்கு இயேசு கொடுத்த பதிலடி நமது சிந்தனைக்குரியது. தாவீதும் அவருடைய சகாக்களும் பசியாய் இருந்தபோது குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை அவர்கள் உண்டதைக் குறித்து நீங்கள் வாசித்து இல்லையா?” என்று 1 சாமு 21:1-6 பகுதியில் இடம்பெறுகின்ற நிகழ்வினைச் சுட்டிக்காட்டி இயேசு அவர்களிடத்தில் கேள்வியைக் கேட்கின்றார். அர்ப்பண அப்பங்கள் என்பது ஒவ்வொரு ஓய்வுநாளின் போதும் உடன்படிக்கைப் பேழைக்குள் வைக்கப்படும் பனிரெண்டு அப்பங்கள் ஆகும். இவற்றை ஆலயத் திருப்பணி என்று விடப்பட்ட குருக்கள் மட்டுமே உண்ணவேண்டும் (லேவி 24: 5-9). வேறு யாராவது உண்டால் அது மிகப் பெரிய குற்றமாகும். ஆனால் பசியாய் இருந்த தாவீதும் அவருடைய தோழர்களும் குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அந்த அர்ப்பண அப்பங்களை உண்கிறார்கள்.

இந்த நிகழ்வினைக் சுட்டிக்காட்டிப் பேசுகின்ற இயேசு பரிசேயர்கள்களுக்கு ஒருசில உண்மைகளைப் புரிய வைக்கின்றார். அதில் முதலாவது ஓய்வுநாள் சட்டத்தை விடவும் மனித தேவைகள் மிகவும் முக்கியமானவை என்பதாகும். மனிதருடைய நலனுக்காகத்தான் சட்டங்கள், விதிமுறைகள் இருக்கின்றன. சட்டத்திற்காக மனிதன் இல்லை என்பதுதான் இயேசு வலியுறுத்திக்கூறும் உண்மையாக இருக்கின்றது.

அடுத்ததாக, குறைகாணும் நோக்கத்தோடே வாழப் பழகிவிட்ட பரிசேயர்களை நிறைகளை/ திருமறையில் உள்ள உண்மைகளையும் காண அழைக்கின்றார். பரிசேயர்கள் எப்போதுமே தங்களுடைய வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலே திருமறை நூலை வாசித்தார்கள். ஆனால், ஆண்டவர் இயேசுவோ திருமறை நூலில் இருக்கும் மனிதாபிமானச் செயல்களைப் பார்க்க அவர்களுக்கு அழைப்புத் தருகின்றார்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாமும் சட்டத்தை நுணுக்கமாகக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று, சக மனிதர்களை ஒடுக்காமல், அவர்களிடம் நம்முடைய அடக்குமுறையைக் காட்டாமல், இரக்கத்தோடு நடந்துகொள்வோம், பிறர் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வோம், இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம், அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.