இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய ஞாயிறு திருப்பலி இரண்டாம் வாசகத்தில் “அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! அனைத்தும் கடவுளிடமிருந்தே வந்தன; அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன.” என்று புனித பவுலடியார் கூறுகின்றார். தமது அன்றாட வாழ்வில் இறைவனை உணராமலும், அவரை நம்பாமலும்,அழிந்து போகும் மனித அறிவினை மட்டும் நம்பும் எண்ணற்ற கடவுள் மறுப்பாளர்களின் மனம் திரும்புதலுக்காக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்.” என்று நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
பேதுரு என்ற பாறையின் மீது இயேசு உருவாக்கிய ஒரே திருச்சபைக்கு மாற்றாக மாதாவை மறுதலிக்கும் பல சபைகள் இன்று தாய் திருச்சபையை வெற்றி கொள்ளாமல் பாதாளத்தின் வாயில்களாக இருக்கின்றன. பேதுரு அனுமதிக்காத இவைகள் விண்ணுலகில் தடை செய்யப்பட்டவை என்பதை பிரிவினை சகோதரர்கள் நன்கு உணர்ந்து இறைவன் உருவாக்கிய ஒரே தாய் திருச்சபைக்கு திரும்பிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய புனிதர் புனித மோனிகா தனது இடைவிடாத வேண்டுதல்களினால் பாதை மாறிய தன் மகனை புனிதர் நிலைக்கு உயர்த்தியது போல பிள்ளைகளின் மனமாற்றத்திற்காக கண்ணீர் விடும் ஒவ்வொரு தாய்மார்களின் மன்றாட்டுக்களை இறைவன் செவிமடுத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை
ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
மதுரை அருகே நேற்று காலை இரயில் பெட்டியில் நடந்த தீ விபத்தில் பலியான 9 பேரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!
Comments are closed.