இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய ஞாயிறு திருப்பலி நற்செய்தி வாசகத்தில் நமதாண்டவர் இயேசு
“அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று கூறியவுடன் அப்பெண்ணின் மகளின் பிணி நீங்கியதைக் காண்கின்றோம். அந்தக் கனானியப் பெண்ணின் தாழ்ச்சி, நம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றை நம் வாழ்விலும் கைக்கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்
“மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.” என்று கூறப்பட்டுள்ளது.
நோயின் நிமித்தம் மருத்துவமனைகளில் இருப்பவர்களை நமதாண்டவர் தொட்டுக் குணமாக்கிட வேண்டி
இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்
“என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்.” என்று இயேசு கூறுகிறார். இன்று அனைவருக்கும் பொதுவான ஆலயங்கள், சமதர்ம சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்காமல் சாதி, பணம் ஆகியவற்றால் பாகுபாடுகளின் உறைவிடமாக விளங்கும் நிலை மறைய வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
நம் ஆரோக்கிய அன்னையின் பரிந்துரை நாடி சென்னையிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி எண்ணற்ற யாத்ரீகர்கள் தங்கள் பாதயாத்திரையை இன்று துவங்கியுள்ளனர்.
அவர்களது அனைவரின் பாதயாத்திரையானது பக்திமிக்கதாகவும், பாதுகாப்பானதாகவும் அமைய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!
Comments are closed.